அணியின் துணை கேப்டன் 12-வது வீரராக இருக்கும்போது, வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் தவறு ஏதுமில்லை என்று ரஹானே கூறினார்.
கடந்த மார்ச் மாதம் நடந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது இந்தியா. வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோலியால் ஆட முடியவில்லை. அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில் கடந்த மாதம் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் 12-வது வீரராக இருந்தார் ரஹானே. இப்போதும் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருக்கும் ரஹானேவிடம், ’ டெஸ்ட் கேப்டனாக இருந்துவிட்டு 12 -வது வீரராக, பேட்ஸ்மேன்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வது கஷ்டமாக இல்லையா?’ என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ’டெஸ்ட்டில் கேப்டனாக இருந்தாலும் ஒரு நாள் போட்டியில் 12-வது வீரராக இருக்கும்போது அதற்கான வேலையை செய்யக்கூடாது என்கிறீர்களா? நாட்டுக்காக விளையாடுகிறோம் என்பதுதான் முக்கியம். உங்களுக்கு என்ன வேலை கொடுக்கப்பட்டி ருக்கிறதோ அதைதான் செய்யவேண்டும். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் போது நான் வீரர்களுக்கு தண்ணீர் கொண்டுபோனேன். இதில் எனக்கு எந்த ஈகோ பிரச்னையுமில்லை’ என்றார் சிரித்துக்கொண்டே.