ரிஷ்ப் பண்ட் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்முடியாமல் போவதற்கு அணியில் அவருக்கு எந்த ரோலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது தான் காரணம் என்று கூறியுள்ளார் இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா, இந்திய அணியில் ரிஷப் பண்ட்டின் ரோல் என்ன என்பதில் தெளிவு இல்லாததுதான், தொடர்ந்து அவர் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடத் தவறியதற்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார். இடது கை விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பண்ட் இந்தியாவுக்காக 62 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள போதிலும், இன்னும் ஆடும் 11ல் அவரது இடம் சீல் செய்யப்படாமல் இருப்பது தொடர்ந்து ரிஷப் பண்டிற்கு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. கிடைக்கும் வாய்ப்புகளில் அதிரடியாக ஆட முற்பட்டு தொடர்ந்து சொதப்பி வருகிறார் பண்ட்.
முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ரிஷப் பண்ட் இறங்க வேண்டிய இடத்தில் ஹர்திக் பாண்டியாவை இறங்க சொல்லும் போது ரிஷப் பண்ட் முக வாட்டத்துடன் அமரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது.
கடந்த மாதத்தில் இருந்து ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ரிஷப் பண்டிற்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டு ஓவர் குறைக்கப்பட்டதால் பேட்டிங் செய்யும் வாய்ப்பு பண்டிற்கு கிடைக்காமல் போனது. பின்னர் தென்னாப்பிரிக்கா தொடரில், ஹர்திக் பாண்டியா அணியில் இல்லாததால், பண்ட் அணியில் இடம்பெற்றார். ஆனால் இந்த தொடரிலும்அவருக்கு முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. மூன்றாவது போட்டியில் அவர் ஓபன் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார், அது நிச்சயமாக அவருக்கு ஒரு குழப்ப மனநிலையை தந்திருக்கும். குழப்ப மனநிலையில் அதிரடியாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் ரிஷப் பண்ட் குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா, ஒவ்வொருவருக்கும் தகுந்த ரோலை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இறக்கியிருக்கும் இந்திய அணி இன்னும் ரிஷப் பண்டிற்கான ரோலை உறுதி செய்யவில்லை. பண்ட் வரும் இடத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு வருவதால், தொடர்ந்து தினேஷ் கார்த்திக்கே முதல் வாய்ப்பு வழங்கப்படுகிறது. உங்கள் அணிக்காக 4ஆம் இடத்தில் விளையாடிய ஒருவீரரை, எப்படி உங்களால் வெளியேற்ற முடியும்” என்று கூறியுள்ளார்.
மேலும் பேசியிருக்கும் அவர், 25 வயதை எட்டிய அந்த இளைஞன், தனது சர்வதேச வாழ்க்கையில் இதேபோன்ற கட்டத்தை கடந்து வந்த கார்த்திக்கிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். ”நீங்கள் உங்கள் பார்ட்னர் தினேஷ் கார்த்திக்கை கேளுங்கள், நான் என்ன செய்ய வேண்டும்? நான் எதையாவது இழக்கிறேனா? நீங்கள் இதை கடந்துவிட்டீர்கள், எனக்கு வழி காட்டுங்கள்” என்று மூத்த வீரரிடமிருந்து உங்களால் கற்றுகொள்ள முடியும்.
”பண்ட் அதிக தூரம் செல்ல வேண்டியதில்லை, கார்த்திக்கை நம்பி அவரை அணிக்குள் ஏற்றுக்கொள்ள 15 வருடங்கள் ஆனது. ரிஷப் பண்டை போலவே தினேஷ் கார்த்திக்கும் அதே திறமை இருந்தது. அணி அவரை மீண்டும் கொண்டு வந்தது. நீங்கள் சிறப்பாக விளையாடினால் அணியில் இருப்பீர்கள், சரியாக செயல்படாமல் போனால் அணி உங்களை ஒரு கட்டத்தில் இழக்க நேரிடும்” என்று கூறியுள்ளார்.