விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்கவே முடியவில்லை என நியூஸிலாந்து அணி வீரர் ராஸ் டைலர் தெரிவித்துள்ளார்.
இந்தியா நியூஸிலாந்து இடையேயான 4வது ஒருநாள் போட்டி நாளை காலை நடைபெறுகிறது. ஹமில்டானின் செடான் பார்க் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் ஆறுதல் வெற்றியையாவது பெற வேண்டும் என்ற முனைப்பில் நியூஸிலாந்து உள்ளது. முன்னதாக, முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்தியா வென்று 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இதில் மூன்றாவது போட்டியில் நியூஸிலாந்து 243 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன போது, அந்த அணியில் ராஸ் டைலர் மட்டும் போராடி 93 ரன்களை குவித்தார். அவரது நிதான ஆட்டம் இல்லையென்றால், அன்று 200 ரன்களையே நியூஸிலாந்து கடந்திருக்காது. இவ்வாறு அணிக்காக போராடிய ராஸ் டைலர், தங்களின் தோல்வி குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில், “போட்டி பாதிக்கு மேல் செல்லும் நிலையில் எங்களால் நிலை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதே நேரம் இந்தியாவிற்கு பாராட்டுக்களை தெரிவித்தே ஆக வேண்டும். எங்களால் இந்தியா பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை எடுத்து, அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கவே முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று போட்டிகளிலும் ஆல் அவுட் ஆகாதது குறிப்பிடத்தக்கது.