விளையாட்டு

“யோசிப்பதற்கு நேரமில்லை, அடுத்தது போட்டிதான்..” - தோல்வியை உணரும் கோலி

“யோசிப்பதற்கு நேரமில்லை, அடுத்தது போட்டிதான்..” - தோல்வியை உணரும் கோலி

webteam

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோற்றது பற்றி இந்திய கேப்டன் விராட் கோலி கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் இன்று ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மேக்ஸ்வெல் 46 (24), லின் 37 (20), ஸ்டோய்னிஸ் 33 (19) மற்றும் கேப்டன் ஃபிஞ்ச் 27 (24) ரன்கள் எடுத்தனர். மழையால் ஆட்டம் 17 ஓவர்களோடு நிறுத்தப்பட்டதால், இந்தியாவிற்கு 17 ஓவர்களில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து, 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியில் ஷிகர் தவான் 76 (42), ரிஷப் பண்ட் 20 (16) மற்றும் தினேஷ் கார்த்திக் 30 (13) ரன்கள் எடுத்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆதாம் ஸம்பா தேர்வு செய்யப்பட்டார்.

போட்டியின் தோல்வி குறித்து பேசிய விராட் கோலி, “நிறைய இந்தியர்கள் எங்களுக்கு ஆதரவளிக்க வருகை தந்திருந்தனர். இங்கு விளையாடுவது ஒரு சிறந்த சூழல். போட்டியை காண்பதற்கு போர் போல இருந்தது. நாங்கள் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினோம். ஆனால் ஸ்டோய்னிஸ் மற்றும் மேக்ஸ்வெல்லின் சிறந்த ஆட்டம் ஆஸ்திரேலிய அணியை மீட்டது. ஷிகர் தவான் சிறந்த தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். 

தினேஷ் கார்த்திக் வழக்கம் போல இறுதி நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை ஆடினார். எங்களுக்கு தோல்வி குறித்து சிந்திக்க நேரமில்லை. நாங்கள் போட்டில் ஜெயிக்கவில்லை. இதில் நல்ல விஷயம் எது, கெட்டது எது என்றெல்லாம் சிந்திக்க முடியாது. நாங்கள் அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும்” என்று கூறினார்.