விளையாட்டு

”இந்தியாவை வென்ற பிறகு பாகிஸ்தானில் எனக்கு இதுதான் நடந்தது”-தகவலை பகிர்ந்த முகமது ரிஸ்வான்

Rishan Vengai

இந்திய அணியை 2021 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அதற்கு பிறகு தன்னுடைய இயல்பு வாழ்க்கை எப்படி மாறியது என்ற தகவலை பகிர்ந்துள்ளார் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான்.

2021 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டியில் விறுவிறுப்பாக பார்க்கப்பட்ட போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. மென் இன் கிரீன் அணியான இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக இதுவரை வென்றதே இல்லை என்ற நிலையை மாற்றி, அபாரமான முதல் வெற்றியைப் பதிவு செய்தது பாகிஸ்தான் அணி. அந்த ஆட்டத்தில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி ஒரு விக்கெட்டை கூட விட்டுக்கொடுக்காமல் முதல் விக்கெட்டுக்கு 152 ரன்கள் சேர்த்து, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடித்தந்தனர்.

இந்தியாவை பாகிஸ்தான் இவ்வளவு மோசமாக வீழ்த்தும் என்று யாரும் எதிர்பார்க்காததால், இது அனைவரின் கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒரு போட்டி முடிவாகவே பார்க்கப்பட்டது. இந்த அசாத்தியமான வெற்றி முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் இருவரால் மட்டும் தான் சாத்தியமானது.

இந்நிலையில் அந்த மற்றக்கமுடியாத போட்டியை நினைவுகூர்ந்த ரிஸ்வான், பாபருடனான தனது வரலாற்று நிலைப்பாட்டிற்குப் பிறகு பாகிஸ்தானில் தனது வாழ்க்கை எவ்வாறு மாறியது என்பதை தற்போது வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் பெற்ற வெற்றியானது, பாகிஸ்தான் அணிக்கு 30 ஆண்டுகால காத்திருப்புக்கு பின் கிடைத்தது.

ஒரு விளையாட்டு சேனலுக்கு அளித்த போட்டியில் ரிஸ்வான், ”அதுவரை இந்தியாவுக்கு எதிராக விளையாடாததால் அது தனக்கு ஒரு விளையாட்டு மட்டுமாகவே இருந்தது. ஆனால் நான் பாகிஸ்தானுக்குத் திரும்பியபோது, அங்குள்ள மக்களுக்கு அது எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு உணர்ந்தது. நான் பாகிஸ்தானில் எந்த ஒரு கடைக்கும் செல்லும் போதெல்லாம், அவர்கள் என்னிடம் பணம் வாங்க மாட்டார்கள், நீங்கள் போங்கள், நீங்கள் போங்கள், உங்களிடம் பணம் வாங்கமாட்டோம், "இங்கே உங்களுக்கு எல்லாம் இலவசம்" என்று மக்கள் கூறினார்கள். அந்த அன்பு நான் எதிர்பார்க்காத ஒன்று என்று தெரிவித்துள்ளார் முகமது ரிஸ்வான்.

கடந்த இரண்டு வருடங்களாக ரிஸ்வான் பாகிஸ்தானுக்காக அற்புதமாக ஆடி வருகிறார். குறிப்பாக 2021 ஆம் ஆண்டில், அவர் தனது அபாரமான பேட்டிங் பார்மால், பல டி20 சாதனைகளை முறியடித்தார். விக்கெட் கீப்பர்-பேட்டரான முகமது ரிஸ்வான், 2021இல் மொத்தம் 29 போட்டிகளில் விளையாடி, 73.66 சராசரியில் மொத்தம் 1326 ரன்கள் எடுத்தார். மற்றும் டி20 போட்டிகளில் ஒரு காலண்டர் ஆண்டில் 1000 ரன்கள் எடுத்த உலகின் முதல் பேட்டர் என்ற வரலாறு படைத்தார். மேலும் 2022 ஆம் ஆண்டில், அவர் 25 போட்டிகளில் 996 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.