அழுத்தமான போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என்று கோலியை பார்த்து கற்றுகொள்ளுங்கள் என்று ரிஷப் பந்த் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவருக்கும் அட்வைஸ் செய்துள்ளார் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர்.
சமீப காலமாக விராட்கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து வைக்கப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் தனது பேட்டிங்கால் பதிலடி கொடுத்திருக்கிறார் இந்திய வீரர் விராட் கோலி.
பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட அவர் ”ஒரு மாதமாக நான் மன அழுத்ததில் இருந்தேன், அதனால் ஒரு மாதமாக பேட்டைக்கூட நான் தொடவில்லை” என்று பொதுவெளியில் பகிரங்கமாக கூறினார். மேலும் நான் இதை எல்லாம் கடந்து தான் வந்திருக்கிறேன், தான் இப்போது எங்கு இருக்கிறேன் என்று எனக்கு தெரியும் என்று தெரிவித்திருந்தார். இதனால் நடக்கும் ஆசிய கோப்பையில் அவர் மீண்டும் தனது பழைய ஃபார்மிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஆசிய கோப்பை தொடங்கிய நிலையில், டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் 100வது போட்டியான பாகிஸ்தான் அணிக்கு எதிரான குரூப் ஸ்டேஜ் முதல் போட்டியில் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்து 35 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றும் அடுத்த போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிராக 59 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார்.
மேலும் நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் விளாசிய கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு நல்ல ஸ்கோரை அமைத்து கொடுத்தார். மற்றும் நடந்து கொண்டிருக்கும் ஆசியகோப்பை தொடரில் 154 ரன்கள் அடித்து 77 ஆவ்ரேஜ் உடன் அதிக ரன்கள் எடுத்தவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், இந்திய அணியின் தோல்விகுறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பீர் விராட் கோலியை புகழ்ந்துள்ளார். அவர் பேசுகையில், நன்றாக இருந்தது கோலியின் இந்த ஆட்டம். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுலின் தொடக்கம் பிரமாதமாக இருந்தது. எல்லோரும் நன்றாகவே விளையாடினார்கள்.
ஆனால் விராட் கோலியின் பிரமாதமான பேட்டிங்கிற்கான பாராட்டை நீங்கள் அவருக்கு கொடுக்க வேண்டும். முதல் மற்றும் இரண்டாவது போட்டியில் அவர் பேட்டிங் செய்த விதம், பழையான ஃபார்மிற்கு திரும்புவதற்கான அந்த நம்பிக்கையை திரும்பப் பெற்றிருப்பதைக் காட்டுகிறது. இந்த ஃபார்மை அவர் தொடர்ந்து வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் ” சூர்யகுமார் மற்றும் ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்கள் அழுத்தம் நிறைந்த போட்டிகளில் எப்படி விளையாடி ரன்களை சேர்க்க வேண்டும் என்று விராட் கோலியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். உங்களால் எல்லா நேரத்திலும் பெரிய ஷாட்களை ஆடமுடியாது, விக்கெட்டுகளில் கோலி 1, 2 ரன்களை ஓடி பெறும் திறன் தான் அவரை அழுத்தமான நிலையில் இருக்காமல் இருக்க உதவுகிறது. அவரால் ஒரு ரன்னிற்கான இடத்திலும் இரண்டு ரன்களையும் முடிகிறது” என்று தெரிவித்தார்.