விளையாட்டு

போட்டி முடிந்ததும் அர்ஸ்தீப் சிங்கிற்கு ஆதரவாக கோலி கொடுத்த குரல்..என்ன சொன்னார் தெரியுமா?

போட்டி முடிந்ததும் அர்ஸ்தீப் சிங்கிற்கு ஆதரவாக கோலி கொடுத்த குரல்..என்ன சொன்னார் தெரியுமா?

webteam

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேட்சை தவறவிட்ட அர்ஷ்தீப் சிங் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்து வரும் நிலையில், இந்திய வீரர் விராட் கோலி ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 181 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 182 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, கடைசி ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது ரவி பிஷ்னோய் வீசிய 18வது ஓவரின் 3வது பந்தில் ஆசிஃப் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங். இதையடுத்து புவனேஷ்வர் குமார் வீசிய 19வது ஓவரில் ஆசிஃப் அலியும் குஷ்தில் ஷாவும் இணைந்து 19 ரன்களை விளாசினர். அந்த ஓவரிலேயே கிட்டத்தட்ட பாகிஸ்தானின் வெற்றி உறுதியாகிவிட்டது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 7 ரன் தான் தேவைப்பட்டது. அதை எளிதாக அடித்து பாகிஸ்தான் வெற்றி பெற்றுவிட்டது.

ஆசிஃப் அலியின் கேட்ச்சை அர்ஷ்தீப் சிங் பிடித்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கக்கூடும். கேட்சை விட்ட அர்ஷ்தீப் சிங்கை, களத்திலேயே கேப்டன் ரோகித் சர்மா பயங்கரமாக திட்டினார். இதையடுத்து இந்திய அணியின் இந்த தோல்விக்கு அர்ஷ்தீப் சிங்தான் முக்கிய காரணம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். அதேநேரம், 'இக்கட்டான சூழ்நிலைகளில் இதுபோன்று தவறுகள் நடப்பது இயல்பானது தான்' என்று அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய வீரர் விராட் கோலியும் “ அழுத்தம் நிறைந்த போட்டிகளில் யார் வேண்டுமானாலும் தவறு செய்யலாம், அந்த தவறிலிருந்து கற்றுக்கொள்வது தான் முக்கியம் “ என இளம்வீரர் அர்ஸ்தீப் சிங்கிற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கும் கோலி, ”யார் வேண்டுமானாலும் தவறு செய்யலாம், இந்த போட்டியில் அழுத்தம் அதிகமாக இருந்தது. இதுபோன்ற அதிக அழுத்தமுள்ள போட்டிகளில் சில தவறுகள் நடப்பது இயல்பு. நான் எனது முதல் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, பாகிஸ்தானுக்கு எதிரான அந்த போட்டியில் ஷாஹித் அஃப்ரிடிக்கு எதிராக மிக மோசமான ஷாட்களை நான் விளையாடினேன். அந்த போட்டி முடிந்த பிறகு காலை 5 மணி வரை நான் செய்த தவறையே நினைத்து சீலிங்கை பார்த்துக் கொண்டிருந்தேன், என்னால் தூங்க முடியவில்லை. இனி அவ்வளவு தான் என் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இது போன்ற தவறுகள் நிகழ்வதெல்லாம் இயற்கையானது தான்” என்று பேசினார்.

மேலும் ”மூத்த வீரர்கள் உங்களைச் சுற்றி இருக்கிறார்கள், இப்போது ஒரு நல்ல சூழல் அணியில் உள்ளது. அதற்காக நான் கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதனால் வீரர்கள் தங்கள் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்கிறார்கள். எனவே ஒருவர் தனக்கு ஏற்படும் தவறை சரி செய்துகொண்டு மீண்டும் அதுமாதிரியான அழுத்த சூழ்நிலையில் சிறப்பாக செயல்படுவதை எதிர்நோக்க வேண்டும்” என்று பேசியுள்ளார் விராட் கோலி.

மேலும் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், ''இளம் வீரரை இப்படி கடுமையாக விமர்சிப்பதை நிறுத்துங்கள் யாரும் கேட்சை வேண்டுமென்றே விடமாட்டார்கள். இந்திய வீரர்கள் விளையாடிய விதம் பெருமிதமாக இருக்கிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி நன்றாக விளையாடினார்கள். சொந்த நாட்டின் வீரர்களை கஷ்டமான சூழலில் தள்ளி மிகவும் தரக்குறைவாக பேசும் சிலரை அவமானமாக பார்க்கிறேன். அர்ஷ்தீப் சிங் மிகவும் தங்கமானவர்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் வீரர் வசிம் ஜாபர், “இந்திய அணியின் தோல்விக்கு அர்ஸ்தீப் சிங்கின் கேட்சை மட்டுமே குற்றம்சொல்ல முடியாது. அவர் கோட்டைவிட்ட கேட்ச் மிகவும் மதிப்புமிக்கதுதான். ஆனால், கிரிக்கெட் போட்டிகளில் இவ்வாறு நடக்கும். அது இயல்புதான்” என்று கூறியுள்ளார்.