விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் பவுலரை கிண்டலாக புகழ்ந்த ரோகித் ஷர்மா

webteam

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரின் 2வது டி20 போட்டி இன்று லக்னோவில் நடைபெறுகிறது. ஏற்கனவே முதல் டி20 போட்டியில் தோல்வியடைந்ததால், இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடவுள்ளது. அதே நேரம் இன்றைய போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்திய அணி உள்ளது.

கடந்த போட்டியில் இந்திய அணி 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்கை எதிர்த்து விளையாடிய போதிலும், போராடி தான் வெற்றி பெற்றது. அதற்குக் காரணம் வெஸ்ட் இண்டீஸின் கடுமையான பந்துவீச்சு. குறிப்பாக அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஓஷானே தாமஸ் இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டிவிட்டார். அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் 6 மற்றும் 3 ரன்களில் வெளியேறினர்.

இந்நிலையில் தாமஸ் குறித்து பேசியுள்ள ரோகித் ஷர்மா, “தமாஸ் சிறந்த திறமை கொண்டவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவரது உயரமாகவும் அதே நேரம் உயரமாகத் தாவியும் பந்துவீசுவதால், அவர் சரியான இடத்தில் பந்தை வீசினால், உலகின் எந்த பேட்ஸ்மேனும் அதை எதிர்கொள்வது கடினம். அவரது திறமையுடன், அவரது உயரமும் சேர்ந்து அவருக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. அவருக்கு சிறந்த எதிர்காலம் அமைய நான் வாழ்த்துகிறேன். ஆனால் அது இந்தியாவிற்கு எதிராக அல்ல” என சிரித்தபடியே கிண்டலாக கூறியுள்ளார்.