விளையாட்டு

”அற்புதமாக விளையாடினார், அவரை அப்படி வெளியேற்ற விரும்பவில்லை”- 'மான்கட்' குறித்து ரோகித்

Rishan Vengai

இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா சதமடிப்பதற்கு முன்னதாக, இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி அவரை மான்கட் முறையில் அவுட் செய்துவிடுவார். பின்னர் அது இந்திய ரோகித் சர்மாவால் வேண்டாமென மறுக்கப்பட்டது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டி கவுகாத்தியில் பர்ஸபரா மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில்லின் ஸ்டிராங்கான அடித்தளத்தாலும், விராட் கோலியின் அதிரடியான சதத்தாலும், 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது. விராட் கோலி அதிகபட்சமாக 12 பவுண்டரிகள், 1 சிக்சர் என விளாசி 87 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில் 374 என்ற கடினமான இலக்கை அடைய போராடியது இலங்கை அணி. சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கையை பின்னுக்கு தள்ளினர். சிறப்பான தொடக்கத்தை கொடுத்த பதும் நிஷாங்கா 72 ரன்களிலும், மிடில் ஆர்டரில் வந்து போராடிய டி சில்வா 47 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். 30. 4 ஓவர் முடிவில் 161 ரன்களை 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இலங்கை.

அதற்கு பின்னர் தான் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாக களத்திற்குள் வந்தார், இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா. கைக்கோர்த்த ஹசரங்கா மற்றும் ஷனகா இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிக்காட்ட ஆரம்பித்தனர். ஹசரங்கா 7 பந்துகளில் 2 சிக்சர்கள், 1 பவுண்டரி என மிரட்ட, அவரை விரைவாகவே வெளியேற்றினார் சாஹல். பின்னர் இறங்கிய துனித்தும் டக்கவுட்டாகி வெளியேற, 38 ஓவர்களில் 206க்கு 8 விக்கெட்டுகள் என்ற நிலையில் 9ஆவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கேப்டன் ஷனகா மற்றும் ரஜிதா இருவரும் போட்டியை கடைசிவரை எடுத்துச்செல்ல முடிவெடுத்தனர்.

சனகாவை மான்கட் முறையில் 98 ரன்களில் அவுட் செய்த முகமது ஷமி!

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷனகா இந்திய பந்துவீச்சாளர்களை பந்துகளை நாலாபுறமும் சிக்சர், பவுண்டரிகளா விரட்டினார். அரைசதத்தை கடந்த ஷனகா, 11 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என விளாசி 98 ரன்களில் இருக்க, 50ஆவது ஓவரை வீசவந்தார். 49.4ஆவது பந்தை வீச வந்த முகமது ஷமி, நான் ஸ்டிரைக்கில் நின்று கொண்டிருந்த கேப்டன் ஷனகா கிரீஸ்ஸை விட்டுவெளியேறும் போது மான்கட் முறையில் ரன்அவுட் செய்துவிடுவார். அதை சற்றும் எதிர்பாராத ஷனகா, அமைதியாகவே இருப்பார். பின்னர் அம்பயர் மூன்றாவது அம்பயருக்கு செல்ல முடிவெடுப்பார்.

ரோகித் குறுக்கிட்டு அப்பீலை வேண்டாம் என சொல்வார்!

அப்போது ஷமியிடம் வந்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா வேண்டாம் என கூற, முகமது ஷமி அம்பயரிடம் சென்று அப்பீல் கேட்க வேண்டாம் என சொல்வார். பின்னர் கடைசி 2 பந்துகளை எதிர்கொண்ட சனகா பவுண்டரி, சிக்சர் என விளாச தனது 2ஆவது ஒருநாள் சதத்தை பதிவுசெய்தார் தசுன் ஷனகா. இறுதியில் இலங்கை 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

சனகா அற்புதமாக விளையாடினார், அவரை அந்தமுறையில் நாங்கள் வெளியேற்ற விரும்பவில்லை!

போட்டி முடிந்த பிறகு ஷனகாவின் அந்த மான்கட் குறித்து பேசிய ரோகித்சர்மா, “ஷமி மான்கட் முறையில் அவரை ரன் அவுட் செய்தார் என்று எனக்குத் முதலில் தெரியாது. அப்போது அவர் 98 ரன்களில் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். இறுதிவரை களத்தில் நின்று அவர் பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. எப்படி அவரை அந்தமுறையில் வெளியேற்ற முடியும், நாங்கள் அவரை அப்படி வெளியேற்ற நினைக்கவில்லை. அவருக்கு வாழ்த்துகள், நன்றாக விளையாடினார்” என்று தெரிவித்தார்.

ரோகித் சர்மாவின் இந்த செயல் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட நிலையில், இலங்கை அணியில் முன்னாள் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் புகழ்ந்துள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் மேத்யூஸ், “ ரோகித் சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்தினார். நிறைய கேப்டன்கள் இதை செய்யமாட்டார்கள். மான்கட் முறையிலான அவுட்களை விதிமுறைகளே சரியென சொல்லும்போது, அவர் அப்பீலை திரும்பபெற்றதற்கு அவருக்கு ஹேட்ஸ் ஆஃப்” என்று அவருடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.