விளையாட்டு

’அவருக்கு நானோ, வேறு யாருமே அட்வைஸ் செய்ய தேவையில்லை’ - கோலி குறித்து டிவில்லியர்ஸ்

PT

விராட் கோலி தனது மோசமான ஃபார்மில் இருந்து வெளியே வர கடினமாக உழைக்க வேண்டும் என்று யாரும் சொல்லத் தேவையில்லை என்று முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிக மோசமான ஃபார்மில் இருந்து வருகிறார். செஞ்சுரிகளால் ஆயிரம் ஆயிரம் ரன்களாக குவித்து கொண்டிருந்த கோலி கடைசி 3 ஆண்டுகளாக ஒரு 100 ரன்கள் போட்டியை கூட சந்திக்காமல் தனது ஆயிரம் ரன்களை கடந்து இருக்கிறார். சதங்கள் தான் அடிக்கவில்லை என்றாலும் அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் அவரது பேட்டிங்க் ஆவ்ரேஜ் இன்னும் பெரிய மாற்றங்கள் இல்லாமல் அப்படியே தான் இருக்கிறது.

காரணம் அவர் சதம் அடிக்கவில்லை என்றாலும் அரைசதங்களை அடித்து வருகிறார். பெரும்பாலான வீரர்களுக்கு அவரது இந்த ரன்களே எட்டாத இடத்தில் இருக்கும் நிலையில் விராட் கோலி இதற்கு முன் செய்து காட்டி வைத்திருக்கும் உயர் தரத்திற்கு இல்லை என்பதால் அனைவரும் கவலை தெரிவித்து வந்தனர். இதற்கு முன்னும் சதம் அடிப்பதற்கு பெரிய இடைவெளி ஏற்படும்போதெல்லாம் விமர்சனம் எழும் நிலையில் பெரிய சதம் ஒன்றை அடித்து அவர்களின் வாயை அடைத்திருக்கும் கோலி, தற்போது இன்னும் அதை செய்யாமல் இருக்கும் நிலையில் அனைவரும் விராட் கோலிக்கு எதிராக பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்நிலையில், விராட் கோலியின் பார்ம் குறித்து பேசி இருக்கிறார் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னால் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ். அதுகுறித்து பேசியிருக்கும் அவர், ”இதுவரை விளையாடிய சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் கோலி. ஃபார்ம் தற்காலிகமானது, அவருடைய கிளாஸ் நிரந்தரமானது. விராட் கோலி உலகத் தரத்தில் இருக்கிறார்.” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் விராட் கோலியும் நானும் வழக்கமான தொடர்பில் இருக்கிறோம். நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம். ”விராட் கோலி தனது மோசமான ஃபார்மில் இருந்து வெளியே வர கடினமாக உழைக்க வேண்டும் என்று நானோ வேறு யாரோ சொல்லத் தேவையில்லை” என்று கூறியிருக்கிறார்.

மேலும் ஆர்சிபி குறித்த கேள்விக்கு, 2023 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் இணைய ஆர்வமாக இருக்கிறேன். பல ஆண்டுகளாக ஆர்சிபியுடன் தொடர்பில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மற்றும் அவர்கள் உரிமையுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். 2023 ஐபிஎல்லின் போது RCB ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பெறுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது எனக்கு கிடைத்திருக்கும் பெரிய கவுரவமாக கருதுகிறேன் என்று தெரிவித்தார்.