விளையாட்டு

”உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லாத வங்கதேசம்”- கேலி செய்த இலங்கை அணி.!

webteam

உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லாத வங்கதேசம், ஆட்டத்தை இழந்தது என்று வங்கதேச அணியை கேலி செய்து பதிவிட்டுள்ளது இலங்கை அணி.

ஆசிய கோப்பை தொடர் தொடங்கியதில் இருந்தே அனைத்து போட்டிகளும் சூடு பிடித்துள்ளன. ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாத அளவுக்கு சிறப்பாக அமைந்து வருகிறது.

இந்தியா பாகிஸ்தான் மோதிகொண்ட போட்டி மட்டுமில்லாமல், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டியும் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் கடைசி வரை சென்றது. கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 6 சிக்சர்களை பறக்கவிட்டு 43 ரன்களை அடித்த நஜிபுல்லா வெற்றியை பங்களாதேஷ் கையிலிருந்து பறித்து ஆப்கானிஸ்தானிற்கு தந்தார். இந்நிலையில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. அந்த போட்டி தொடங்குவதற்கு முன்னரே இரு அணிகளுக்குமிடையே காரசாரமான கருத்து பறிமாற்றங்கள் செய்யப்பட்டன.

பங்களாதேஷ் அணி குறித்து பேசிய இலங்கை அணி கேப்டன் சனகா, பங்களாதேஷ் அணியில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் மற்றும் ஷாகிப் அல் ஹசன் தவிர வேறு எந்த பந்துவீச்சாளர்களும் உலகத்தரம் வாய்ந்தவர்கள் இல்லை. எனவே அவர்கள் ஆப்கானிஸ்தானை விட சிறிய அணி தான் எங்களுக்கு என்று கூறியிருந்தார். சனகாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து பேசிய பங்களாதேஷ் அணியின் இயக்குனர் காலித் மஹ்மூத், இலங்கை அணியில் ஒரு பவுலர் கூட உலகத்தரம் வாய்ந்தவர்கள் இல்லை என்று கூறினார்.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹிலா ஜெயவர்தனே, பங்களாதேஷ் அணி இயக்குனர் பேசிய வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்து ”இது களத்தில் இருக்கும் இலங்கை பந்துவீச்சாளர்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய நேரம்” என்று பதிவிட்டிருந்தார்.

பலத்த கருத்து மோதல்களுக்கிடையே நடந்த போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மெஹிதி ஹாசன் நல்ல அதிரடி தொடக்கத்தை தந்தார். பின்னர் வந்த அஃபிப் ஹொசைன் மற்றும் மொசதேக் ஹொசைன் இருவரும் அதிரடியாக ஆடி பங்களாதேஷ் அணிக்கு 183 என்ற நல்ல ஸ்கோரை அமைத்து கொடுத்தனர்.

184 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கை அணி நல்ல தொடக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் குசால் மெண்டிஸ் மறுபுறம் அவரது விக்கெட்டை விடாமல் நிலைத்து நின்று ஆடி பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 131 இருந்த நிலையில் குசால் மெண்டிஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். அப்போது இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இருந்த நிலையில் போட்டியின் வெற்றி பங்களாதேஷ் அணிக்கு சாதகமாகவே இருந்தது.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணி கேப்டன் சனகா அதிரடியாக ஆடி 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் விளாசி 45 ரன்கள் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்று ஆட்டமிழந்தார். இறுதிவரை பரபரப்பாக ஆட்டத்தை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் போட்டி முடிவடைந்த நிலையில், இலங்கை அணி அதன் பேஸ்புக் பக்கத்தில் போட்டியின் ஸ்கோர்கார்டை சேர்த்து “உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லாத வங்கதேசம், ஆட்டத்தை இழந்தது, இல்லையா?” என்று பதிவிட்டுள்ளது.

இச்சம்பவம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ரசிகர்களுக்கு இடையே கருத்து மோதல்களை ஏற்படுத்தியுள்ளது.