காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து தமிழக வீரர் விஜய்சங்கர் விலகியுள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் விஜய்சங்கர் இடம்பிடித்திருந்தார். இருப்பினும், தொடக்கத்தில் நடைபெற்ற போட்டிகளில் அவர் விளையாடவில்லை. காயம் காரணமாக ஷிகார் தவானுக்கு ஓய்வு அளிக்கப்படவே, விஜய்சங்கர் ஆடும் லெவனின் விளையாடினார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய மூன்று அணிகளுக்கு எதிராக அவர் விளையாடினார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டும் இரண்டு விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மற்ற போட்டியில் அவர் பந்துவீசவில்லை. அதேபோல், பேட்டிங்கிலும் பெரிதாக தாக்கத்தை செலுத்தவில்லை. மொத்தமே 58 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இதனிடையே, காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டார்.
இந்நிலையில், உலகக் கோப்பை தொடரில் மீதமுள்ள அனைத்து போட்டிகளில் இருந்தும் விஜய் சங்கர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக மயங்க் அகர்வாலுக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை தொடரில் விஜய்சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகிய இரண்டு தமிழக வீரர்கள் இடம்பிடித்திருந்தனர். விஜய்சங்கர் விலகியுள்ள நிலையில், தினேஷ் கார்த்திக் மட்டும் அணியில் உள்ளார். ஆனாலும், ஆடும் லெவனில் அவருக்கு இதுவரை வாய்ப்பு அளிக்கப்படவில்லை.