விளையாட்டு

“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ் வருத்தம்

webteam

ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா போன்ற வீரர்களின் இடத்தை ஒரே இரவில் நிரப்ப முடியாது என தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்துள்ளது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றது. முதல் டெஸ்ட்டில் 203 ரன்கள் வித்தியசாத்தில் தென்னாப்பிரிக்கா தோற்ற நிலையில், இன்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் மட்டுமின்றி இன்னிங்ஸ் தோல்வியும் அடைந்துள்ளது.

இதுதொடர்பாக பேட்டியளித்த டூ பிளசிஸ், ‘அனுபவம் இன்மையால் இது நடந்துள்ளது. இந்திய அணியிடம் அதிக அனுபவம் உள்ளது. இந்திய வீரர்கள் மிகுந்த அனுபவம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்த நேரத்தில் நாங்கள் அனைத்து அனுபவ வீரர்களும் இல்லாத நிலையில் உள்ளோம். டேல் ஸ்டெயின், மோர்னோ மார்கல், ஹாசிம் அம்லா, ஏபி டி வில்லியர்ஸ் இவர்கள் அனைவரும் மிகுந்த அனுபவம் கொண்டவர்கள். இவர்களின் இடத்தை ஒரே இரவில் நிரப்பிவிட முடியாது” என்று கூறினார்.