விளையாட்டு

“திறமை இல்லாமல் இவ்வளவு தூரம் வர முடியாது”- விமர்சனங்களுக்கு கோலி மறைமுக பதில்

ச. முத்துகிருஷ்ணன்

தன் மீது எழுந்து வரும் கடுமையான விமர்சனங்களுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, “திறமை இல்லாமலா இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்” என்று மறைமுகமாக பதிலளித்து இருக்கிறார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி தொடங்கும் ஆசியக் கோப்பை 2022 இல் விராட் கோலி மீண்டும் களமிறங்க உள்ளார். 28 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து களமிறங்க இருக்கிறது இந்திய அணி. இந்தத் தொடரில் கோலி மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்புவார் என கிரிக்கெட் ரசிகர்களும் விமர்சகர்களும் எதிர்பார்க்கின்றனர்.

முன்னதாக இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரின் அனைத்து வடிவங்களிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) கோலி விளையாடிய ஆறு இன்னிங்ஸ்களில், ஒரு அரை சதத்தை கூட எடுக்கவில்லை. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் அவர் அடித்த 20 ரன்கள்தான், சுற்றுப்பயணத்தில் அவரது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. கோலியின் இந்த ஆட்டத்திறனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் கிளம்பின.

இதையடுத்து ஆசியக் கோப்பையில் தனது முழு திறமையையும் காண்பிக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். போட்டிக்கு முன்னதாக கோலியின் பயிற்சி வீடியோ இம்மாத தொடக்கத்தில் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் தான் செய்தது தவறு என்பதை கோலி ஒப்புக்கொண்டுள்ளார்.

“இங்கிலாந்தில் நடந்தது ஒரு மாதிரி. அது நான் கடக்க வேண்டிய ஒன்று. நான் நன்றாக பேட்டிங் செய்கிறேன் என்று எனக்குத் தெரியும் என்பதால், அதைச் செயல்படுத்துவது எனக்கு மிகவும் எளிதான விஷயம். சில சமயங்களில் நான் ரிதம் திரும்பிவிட்டதாக உணரத் தொடங்கும்போது நான் நன்றாக பேட் செய்வேன் என்று தெரியும். எனவே, இது எனக்கு ஒரு பிரச்னை அல்ல.

இங்கிலாந்தில் அதுபோல உணர இயலவில்லை; நான் நன்றாக பேட்டிங் செய்வது போல் எனக்குத் தோன்றவில்லை. எனவே, மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு விஷயத்தில் நான் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. நான் அதை செய்து கொண்டிருக்கிறேன். எனது ஆட்டம் எங்கு நிற்கிறது என்பது எனக்குத் தெரியும், சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறன் மற்றும் பல்வேறு வகையான பந்துவீச்சுகளை எதிர்கொள்ளும் திறன் இல்லாமல் உங்கள் சர்வதேச வாழ்க்கையில் இவ்வளவு தூரம் ஓட முடியாது.

மோசமான இந்த கட்டத்திலிருந்து நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். இந்த கட்டத்திலிருந்து நான் வெளியே வரும்போது, நான் எவ்வளவு சீராக இருக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். எனது அனுபவங்கள் எனக்கு புனிதமானவை. இந்தக் கட்டத்திலோ அல்லது கடந்த காலத்திலோ நான் எதை அனுபவித்திருந்தாலும், நான் உறுதியளிக்கக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு நபராக நான் என்னை ஒருபோதும் அதிகமாக மதிப்பதில்லை” என்று விராட் கோலி கூறினார்.