விளையாட்டு

ஸ்ரேயாஸ் ஐயர் தான் நான்காவது இடத்தில் களமிறங்க வேண்டும்- கும்ப்ளே

webteam

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் நான்காவது இடத்தில் களமிறக்கப்பட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகள் இடையேயான டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்துள்ளனர். 

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நான்காவது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சியில் கும்ப்ளே, “வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் நான்காவது இடத்தில் விளையாட வேண்டும். 

ஏனென்றால் ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டத்திறன் மிகவும் சிறப்பாக உள்ளது. அவர் இந்த இடத்திற்கு பொருத்தமானவராக இருப்பார். அத்துடன் ஷிகர் தவான் இல்லாததால் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார். ஆகவே நான்காவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தான் களமிறங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பில் இருந்து இந்திய ஒருநாள் அணியில் நான்காவது இடத்தில் யார் விளையாட வேண்டும் என்ற கேள்வி இருந்து கொண்டே உள்ளது. இந்த இடத்திற்கு அணி நிர்வாகம் பல வீரர்களை முயற்சித்து உள்ளது. இந்தச் சூழலில் தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் நான்காவது இடத்தில் களமிறக்க பட்டு, அவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் நான்காவது இடத்தில் தொடர்ந்து அவரே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.