ஐயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ரோகித் சர்மா சிறப்பாகவே விளையாடினார். மிக முக்கியமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து தான் ஒரு ஹிட் மேன் என நிரூபித்தார் ரோகித் சர்மா.
இதனையடுத்து இந்திய டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா இடம் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று வெளியிடப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மாவின் பெயர் இடம் பெறவில்லை.
இந்தியாவுக்காக 183 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் ரோகித் சர்மா. ஆனால் இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 177, ஆவரேஜ் 39.77 என மொத்தமாக 1479 ரன்களை குவித்துள்ளார். ஆனால் எப்போதாவது டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவார் ரோகித் சர்மா, ஒரு சில போட்டிகளில் நன்றாக விளையாடுவார் டெஸ்ட்டில் மீண்டும் சொதப்புவார்.
அதனால் டெஸ்ட் அணியில் மட்டுமே உள்ளே வெளியே ஆட்டமாடிவந்தார் ரோகித். இந்தியா ஒரு நாள் போட்டிகளில் தவிர்க்க முடியாத நபராக இருக்கும் ரோகித்துக்கு, டெஸ்ட்டில் மட்டும் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை என்ற வருத்தம் எப்போதும் உண்டு.
இந்த ஏக்கத்தை பல முறை பல பேட்டிகளில் வெளிப்படையாக கூறியுள்ளார் ரோகித். ஆனால் தேர்வு வாரியமோ ரோகித்தை டெஸ்ட் அணியில் சேர்ப்பதை குறித்து யோசித்துக் கூட பார்க்கவில்லை. அதனால்தான் இம்முறையும் டெஸ்ட் அணியில் ரோகித்தின் பெயர் இடம் பெறவில்லை. ஆனால் ரோகித் இம்முறை மிகவும் எதிர்பார்த்து ஏமாந்து இருப்பார் போல அதனால்தான் நேற்று டெஸ்ட் அணி அறிவிப்புக்கு பின்பு, தனது ட்விட்டர் பக்கத்தில் சூசகமான பதிவொன்றை பதிவிட்டிருந்தார் அதில் " சூரியன் மீண்டும் நாளை காலை உதிக்கும்" என கூறியுள்ளார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் தேர்வு வாரியத்துக்கு மறைமுகமாக "நான் மீண்டும் வருவேன்" என கூறியுள்ளார்.