விளையாட்டு

“கங்குலி அறைக்குள் நுழைந்ததும் அதிர்ந்து போனேன்” - விவிஎஸ் லக்ஷ்மண் பெருமிதம்

webteam

‘தாதா’கங்குலியுடனான தனது பழைய நினைவுகளை விவிஎஸ் லக்ஷ்மண் பகிர்ந்து கொண்டுள்ளார். 

கடந்த புதன்கிழமை அன்று ‘தாதா’ சவுரவ் கங்குலி பிசிசியின் 39 வது தலைவராக அதிகாரப்பூர்வமாக பதிவியேற்றார். இதனை அடுத்து புதிய தலைவராக பதிவியேற்ற கங்குலிக்கு மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக முகமது அசாருதீன் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மண் கலந்துக் கொண்டனர். அப்போது லக்ஷ்மண் தனக்கும் கங்குலிக்குமான பழைய நினைவுகள் பகிர்ந்து கொண்டார். 

அப்போது அவர் கூறிய சில தகவல்கள் கங்குலி உயர்ந்த பதவியில் இருந்த காலத்திலும் எவ்வளவு எளிமையாக தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் என்பதை விளக்கும்விதமாக இருந்தது. அவர் பேசிய போது, “மேற்கு வங்க கிரிக்கெட் ஆணையத்தின் இணைச் செயலாளராக சவுரவ் கங்குலி இருந்தபோது நான் பேட்டிங் ஆலோசகராக இருந்தேன். அப்போது அவரது அறைக்கு நான் போனேன். அந்த அறைக்குள் நுழைந்தபோது நான் அதிர்ந்து போனேன்.  அது மிகச் சிறிய அறை. கங்குலி  அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான ஒரு கேப்டன். 

ஆகவே அது எனக்கு ஆச்சர்யமாக, ஈர்க்கும்படியும்  இருந்தது. கிரிக்கெட் உலகில் பெரிய ஜாம்பவான் என்பதை நீங்கள் மறந்துவிடலாம். கொல்கத்தாவை பொறுத்தவரை நீங்கள் ஒரு இளவரசர்.  இப்படி கங்குலி முழு அர்ப்பணிப்புடன் தனது இணைச்செயலாளர் பதவியை நிறைவேற்றினார்” என்று லக்ஷ்மண் மனதார பேசினார்.