விளையாட்டு

ஷாட் பிட்ச் பந்துகளை நன்றாக ஆடாததால் தோற்றோம்: பாக்.கேப்டன்

webteam

’’வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில், தொடக்க விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்ததால் தோல்வி அடைந்தோம்’’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவித்தார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, ட்ரெண்ட் பிரிட்ஜில் நேற்று நடந்தது.  முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால், 21.4 ஓவரில் 105 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் தாமஸ் 4 விக்கெட்டும் ஹோல்டர் 3, ரஸல் 2 விக்கெட்டையும் எடுத்தனர். ரஸல் 3 ஓவர்கள் வீசி 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டை சாய்த்தார். 

106 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 13.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. தொடக்க வீரர் கிறிஸ் கெயில் 34 பந்தில் 50 ரன்னும் சாய் ஹோப் 11 ரன்னும் நிகோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்னும் ஹெட்மயர் 7 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர் 3 விக்கெட்டையும் சாய்த்தார்.

மோசமான தோல்வி பற்றி பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறும் போது,  ’’முதலில் டாஸை இழந்தோம். பிறகு தொடக்க விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்ததால் மீண்டு வருவது கடினமாகிவிட்டது. முதல் அரை மணி நேரம் ஆடுகளத்தை கணிக்க முடியவில்லை. நின்று ஆடியிருக்க வேண்டும். இது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் தான். ஆனால், நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவோம் என நினைக்கிறேன். வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சு சவாலாக இருக்கும் என்பது தெரியும்.

ஷாட் பிட்ச் பந்துகளை நாங்கள் நன்றாக ஆடவில்லை. இன்றைய (நேற்று) நாள் எங்களுக்கு மோசமானதாக அமைந்து விட்டது. எங்கள் அணியின் முகமது ஆமிர் சிறப்பாக பந்துவீசினார். இங்கிலாந்தில் எங்களுக்கு எப்போதும் நல்ல ஆதரவு கிடைக்கும். அந்த ரசிகர்களுக்கு நன்றி’ என்றார்.