ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்ததை இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் விமர்சித்துள்ளார்.
இந்திய அணி தொடர்ந்து 42 மாதங்களாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தவரிசையில் முதலிடம் வகித்தது. கொரோனா பொதுமுடக்கத்தால் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலிய அணி முதலிடம் பிடித்துள்ளது. அத்துடன் இரண்டாம் இடத்திற்கு நியூசிலாந்து அணி வந்ததால், இந்திய அணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரிடம் ஸ்டார் போர்ட்ஸ் கிரிக்கெட் கனெக்ட் சாட் நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய காம்பீர், “எனக்கு இதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை. ஏனென்றால் நான் இந்த புள்ளிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் தரவரிசையை எல்லாம் நம்புவதில்லை. டெஸ்ட் தொடர் சாம்பியன்ஷிப்பில் இதுபோன்ற நடைமுறை மோசமானது. சொந்த மண்ணில் இல்லாமல் வெளிநாடுகளில் பெறும் வெற்றிகளுக்கும் அவர்கள் அதே புள்ளிகளை தான் கொடுக்கிறார்கள். இது அபத்தமானது” என்றார்.
அத்துடன், “டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 100% சவாலான அணி. ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் பார்க்கும் போது, இந்தியா வெளிமண்ணில் தோல்வியடைந்துள்ளது தான். ஆனால் ஆஸ்திரேலிய அணியை சொந்த மண்ணில் வென்றுள்ளது. அத்துடன் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தையும் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியுள்ளது. இதை மற்ற அணிகள் செய்யவில்லை” என்றார்.