2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் வேறுவழியின்றி தன்னை தோனி அணியில் சேர்த்ததாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இருப்பவர் யுவராஜ் சிங். தோனியைப் போன்று இவருக்கும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. இவரது அதிரடி பேட்டிங்கால் தான் 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. அத்துடன் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் யுவராஜ் சிங் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்தினார். இந்த முறையும் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. தொடரின் நாயகனாக யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள யுவராஜ் சிங், 2011ஆம் ஆண்டு தான் இந்திய அணியில் சேர்க்கப்பட்டது தொடர்பாக மனம்திறந்துள்ளார். அவர் கூறும்போது, “சுரேஷ் ரெய்னாவிற்கு பெரிய ஆதரவு இருந்தது. ஏனென்றால் அவரை அணிக்குள் கொண்டுவர தோனி விரும்பினார். அனைத்து கேப்டன்களுக்கும் தங்களுக்கு பிடித்தமான வீரரை அணிக்குள் கொண்டு வரவே விருப்பம் இருக்கும்.
அந்த வகையில் தான் தோனியும் ரெய்னாவை கொண்டுவர நினைத்தார். அந்த சமயத்தில் யூசுஃப் பதானும் நன்றாக விளையாடினார். மற்றொரு புறம் நான் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக பங்காற்றினேன். ஆனால் ரெய்னா சிறப்பாக விளையாடவில்லை. எனவே வேறுவழியின்றி என்னை அணிக்குள் சேர்த்தனர். அணிக்குள் அப்போது விக்கெட்டுகளை வீழ்த்தும் ஸ்பின்னரின் தேவை இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.