விளையாட்டு

"நான் அணிக்காக மட்டும் விளையாடவில்லை நாட்டுக்காகவே விளையாடுகிறேன்" ரோகித் ஷர்மா

"நான் அணிக்காக மட்டும் விளையாடவில்லை நாட்டுக்காகவே விளையாடுகிறேன்" ரோகித் ஷர்மா

webteam

நான் எனது நாட்டிற்காக விளையாடுகிறேன் என்று இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் உலகக் கோப்பை தொடர் தோல்விக்கு பிறகு கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் ஷர்மா ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது என தகவல்கள் வெளியானது. அத்துடன் ரோகித் ஷர்மா இன்ஸ்டாகிராமில் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஆகியோரை பின் தொடர்வதை நிறுத்தினார். எனவே இருவருக்கும் மோதல் இருப்பது உறுதி என்று செய்திகள் பரவின. 

இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கோலி, ரோகித் ஷர்மா உடன் கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விராட், “நீங்கள் சொல்வதை நானும் கேள்விப்பட்டேன். ஒரு அணியின் வெற்றிக்கு ஓய்வு அறையில் நிலவும் சூழல் மிகவும் முக்கியமானது. அந்த தகவல் உண்மையாக இருந்திருந்தால், நம்மால் நன்றாக விளையாடியிருக்க முடியாது. 

ஒரு நபரை எனக்கு பிடிக்கவில்லை என்றால், நான் அவரிடம் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதிலும், என்னுடைய முகத்திலும் நீங்கள் பார்க்கலாம். அது மிகவும் எளிமையான ஒரு விஷயம். நான் எப்பொழுதும் ரோகித் சர்மாவை பாராட்டி வந்துள்ளேன். ஏனெனில் அவர் சிறந்தவர் என்பதை நான் நம்புகிறேன். எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இது ஒருவிதமான குழப்பம்தான். இதனால் யார் பயன் அடைகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை” எனத் தெரிவித்தார். 

இதனையடுத்து இந்திய அணி அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பு விமான நிலையத்தில் எடுத்த செல்ஃபியை கோலியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டார். இந்தப் படத்தில் ரோகித் ஷர்மா இல்லை என மீண்டும் சிலர் கேள்வி எழுப்பினர். ஆகவே கோலி இந்த விவகாரத்தில் பொய் சொல்வதாக சிலர் தெரிவித்தனர். 

இந்நிலையில் ரோகித் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு பதிவை செய்துள்ளார். அதில், “நான் எனது அணிக்காக மட்டும் விளையாடவில்லை, எனது நாட்டிற்காகவும் தான் விளையாடுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். கோலி- ரோகித் இடையே பிரச்னை என்று கூறப்பட்டு வந்த இந்தச் சூழலில் இவ்வளவு நாட்கள் மவுனமாக இருந்த ரோகித் தற்போது இந்தப் பதிவை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.