ஐபிஎல் போட்டியில் பந்துவீச்சாளர்களை கருணையின்றி பதம் பார்க்க போகிறேன் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல் கூறினார்.
பதினோறாவது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. மே 27-ந்தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஐதராபாத் சன் ரைசர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். அதில் வெற்றிபெறும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த முதல் போட்டியில் மும்பையும் சென்னை அணியும் மோதின. இதில் சென்னை திரில் வெற்றி பெற்றது. இன்று, இரண்டு போட்டிகள் நடக்கின்றன. பஞ்சாப்- டெல்லி, கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதும் போட்டிகள் இன்று நடக்கிறது.
இன்று மாலை நான்கு மணிக்கு பஞ்சாப்- டெல்லி அணிகள் மோதும் போட்டி நடக்கிறது. பஞ்சாப் அணிக்கு அஸ்வினும், கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக்கும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளனர். ஐபிஎல் கேப்டன்ஷிப்பில் அவர்களுக்கு இது டெஸ்ட்.
இந்நிலையில் பெங்களூர் அணியில் ஆடிவந்த கிறிஸ் கெய்லை, மோசமான ஃபார்ம் காரணமாக, இந்த வருடம் அந்த அணி கைவிட்டது. பஞ்சாப், அவரை நம்பி ஏலத்தில் எடுத்திருக்கிறது.
ஐபிஎல் போட்டியில் பல்வேறு ரெக்கார்டுகளை வைத்திருக்கிற கிறிஸ் கெய்ல் கூறும்போது, ’என்னை தேர்வு செய்ததற்காக, வீரேந்திர சேவாக்கிற்கும் பஞ்சாப் அணி நிர்வாகத்துக்கும் நன்றி. ஆட்டத்தின் போது எதையும் கடைசி நேரத்தில்தான் முடிவு செய்வேன். இந்த தொடரில் பந்துவீச்சாளர்களைக் காயப்படுத்த முடிவு செய்துள்ளேன். எனக்கு முன்னால் பெரும் பொறுப்பு இருக்கிறது. அதை சரியாகப் பயன்படுத்த நினைக்கிறேன். எங்கள் அணி சிறந்த ஒன்று. கிங்ஸ் லெவன் ரசிகர்களுக்கு பவுண்டரிகளையும் சிக்சர்களையும் விளாசி பொழுதுபோக்கை அளிக்க இருக்கிறேன்’ என்றார்.