தோனியிடம் நீங்கள் நிறையக் கற்றுக்கொள்ளலாம் என்று முகமத் ஷமி கூறியுள்ளார்.
இந்திய அணியில் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் முகமத் ஷமி. இவர் ஒருநாள் போட்டி, டெஸ்ட் மற்றும் டி20 என அனைத்து ரக கிரிக்கெட்களிலும் தோனி தலைமையில் தான் களமிறங்கினார். இந்நிலையில் தோனி உடனான அனுபவம் ஒன்றை இன்ஸ்டாகிராம் நேரலை உரையாடல் ஒன்றில் முகமத் ஷமி பகிர்ந்துள்ளார்.
2014ஆம் ஆண்டு இந்தியா - நியூஸிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியின் போது அந்தச் சம்பவம் நடந்துள்ளது. அன்று இந்திய அணிக்கு எதிராக பிராண்டன் மெக்கல்லம் 300 ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார். அப்போது பந்துவீசிக்கொண்டிருந்த முகமத் ஷமியிடம், பவுன்சர் போட வேண்டாம் என தோனி கூறியிருக்கிறார். ஆனாலும் ஷமி பவுன்சர் போட, அது மெக்கல்லம் பேட்டில் பட்டு தோனி தலைக்கு மேலே சென்றிருக்கிறது.
அப்போது ஏன் பவுன்சர் போட்டாய் என தோனி ஷமியிடம் கேட்க, அவர் கை நழுவி பந்து பவுன்சர் ஆகிவிட்டது எனக்கூறியிருக்கிறார். அப்போது கடுப்பான தோனி, “நான் நிறைய வீரர்களைப் பார்த்திருக்கிறேன். என்னிடம் நீ பொய் கூறாதே. நான் உன் கேப்டன். அத்துடன் உன்னைவிட சீனியர். எனவே என்னை ஏமாற்ற முயற்சிக்காதே” என கண்டித்துள்ளார்.
இந்த சம்பவத்தை ஷமி மனம் திறந்து கூறியுள்ளார். அத்துடன் “நான் எனது அனைத்து கிரிக்கெட் தொடக்கங்களையும் தோனியிடம் தான் ஆரம்பித்தேன். அவரிடம் நீங்கள் நிறையக் கற்றுக்கொள்ளலாம். அவர் ஒரு புத்திசாலி” என ஷமி கூறியுள்ளார்