பொல்லார்ட்டிற்கு வாழ்த்து தெரிவித்த பிராவோவின் பதிவு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஜேசன் ஹோல்டர் கேப்டனாகவும் டி-20 போட்டிக்கு பிராத்வேட் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தனர். உலகக் கோப்பை தொடர் மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர் தோல்வியை சந்தித்தது. எனவே அந்த அணியின் கேப்டன்களை மாற்ற அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இதையடுத்து ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு கேப்டனாக பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பொல்லார்ட் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு அந்த அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் பிராவோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், “என்னுடைய நண்பன் பொல்லார்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் அதற்கு தகுதியானவர். நீங்கள் சிறப்பான கேப்டனாக செயல்படுவீர்கள். நான் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவேன் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் பிராவோ கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்திருந்தார். இவர் வெஸ்ட் இஸ்டீஸ் அணியில் 2004ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார். அதன் பிறகு 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒருநாள் போட்டிகள் மற்றும் 66 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். கடைசியாக பிராவோ வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விளையாடினார். இந்தச் சூழலில் தற்போது பொல்லார்ட் கேப்டன் பதவிக்கு தேர்வான பிறகு பிராவோ மீண்டும் விளையாட வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.