விளையாட்டு

“தோனி பேட்டை வீசி எறிந்துவிட்டு போனார்..” - இர்பான் பதானின் அனுபவங்கள்..!

“தோனி பேட்டை வீசி எறிந்துவிட்டு போனார்..” - இர்பான் பதானின் அனுபவங்கள்..!

webteam

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் அவர் கோபப்பட்ட தருணத்தையும் பகிர்ந்துள்ளார் முன்னாள் ஆல் ரவுண்டரான இர்பான் பதான்.

சமீபகாலமாக தோனியுடனான அனுபவங்கள் குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் பேசி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் வேறு எதையாவது பேசினாலும் கூட, அவர்களிடம் தோனி குறித்து ஒரு கேள்வியையாவது தொகுப்பாளர் மற்றும் செய்தியாளர்கள் முன் வைத்துவிடுகின்றனர். இதனால் பேட்டியளிப்பவர்களும் தோனி குறித்த கருத்தை பேசிவிடுகின்றனர்.

அந்த வகையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கன்னெக்டெட் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், தோனி கோபமடைந்த தருணம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் கூறும்பொதும், “அந்தச் சம்பவம் 2006-07ஆம் ஆண்டில் நடந்தது. அப்போது அணியினர் அனைவரும் பயிற்சி மேற்கொண்டிருந்தோம். எங்களுக்குள்ளேயே இரண்டு அணிகளாக பிரித்துக்கொண்டு, வலதுபுறம் பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேன்கள் இடதுபுறம் ஆட வேண்டும் எனவும், இடதுபுறம் பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேன்கள் வலதுபுறம் ஆட வேண்டும் என தீர்மானித்துக்கொண்டோம்.

அப்போது தோனி எதிர்பாராத விதமாக அவுட் ஆகிவிட்டார். உடனே அவர் கடுப்பாகி தனது பேட்டை வீசிவிட்டு, தன்னைத் தானே திட்டிக்கொண்டு சென்றுவிட்டார். பின்னர் நீண்ட நேரத்திற்குப் பின்னே பயிற்சிக்கு திரும்பினார். அவர் மிகவும் கோபமடைந்திருந்தார்” என்று தெரிவித்தார்.