விளையாட்டு

“களத்திற்கு உள்ளே மட்டுமல்ல வெளியேவும்...”- வாழ்த்து மழையில் நனையும் சேவாக்..!

“களத்திற்கு உள்ளே மட்டுமல்ல வெளியேவும்...”- வாழ்த்து மழையில் நனையும் சேவாக்..!

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சேவாக்கிற்கு முன்னாள் வீரர்கள் பலர் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக். இவர் இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி, அதிரடி ஆட்டத்தை ஒரு காலத்தில் வெளிப்படுத்தினார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில், ஒரே இன்னிங்ஸில் 300 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். அத்துடன் ஒரு இன்னிங்ஸில் அதிவேகமாக 300 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இவர் 278 பந்துகளில் 300 ரன்களை கடந்து உலக சாதனை படைத்தார். மேலும் இரண்டு முறை ஒரே இன்னிங்ஸில் 300 ரன்கள் அடித்த இந்திய வீரர் சேவாக் தான். 

இந்நிலையில் இன்று சேவாக் தனது 41-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு முன்னாள் வீரர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர், “கிரிக்கெட் ஆடுகளத்தில் பந்துகளை அதிரடியாக அடிப்பது மட்டுமில்லாமல் களத்திற்கு வெளியேவும் ஜோக் அடிப்பது உங்களது இயல்பு. பிறந்தநாள் வாழ்த்துகள் வீரு” எனப் பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், “நான் பந்துவீசியவர்களில் மிகவும் கடிமான பேட்ஸ்மேனான சேவாக்கிற்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து விவிஎஸ் லட்சுமண், “என்னுடைய சிறப்பான நண்பர் வீரேந்திர சேவாக்கிற்கு என் சிறப்பான பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று வாழ்த்தியுள்ளார். 

இதுகுறித்து பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில், “பிறந்தநாள் வாழ்த்துகள் மிஸ்டர் டிரிபிள் சென்சுரீயன் வீரந்திர சேவாக்” எனக் கூறி அவர் 300 ரன்கள் அடித்த வீடியோவையும் பதிவிட்டுள்ளது. 

வீரேந்திர சேவாக் இந்திய அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8586 ரன்களை எடுத்துள்ளார். அதேபோல 251 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி 8273 ரன்கள் சேர்த்துள்ளார். மேலும் 19 டி20 போட்டிகளில் விளையாடி 394 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.