தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 2 ரன்களே தேவைப்பட்ட நிலையில் உணவு இடைவேளையை நடுவர் அறிவித்தார்.
விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்காவிடம் பறிகொடுத்த இந்திய அணி ஒரு நாள் போட்டி தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சுரியன் ஸ்டேடியத்தில் நேற்று நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி 32.2 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
பின்னர் 119 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா 15 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் இணைந்த தவான் - கோலி ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இந்திய அணியின் வெற்றிக்கு இரண்டு ரன்களே தேவைப்பட்ட நிலையில் நடுவர் உணவு இடைவேளை விட்டார். இது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் நடுவர் விதிமுறையை தவறாமல் நடந்து கொண்டார். உணவு இடைவேளைக்கு பின்னர் ஆட்டம் தொடர்ந்து. இந்திய அணி 20.3 ஓவர்களில் 1விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.