வைகுண்ட ஏகாதசி - சொர்க்க வாசல் திறப்பு puthiya thalaimurai
ஆன்மீகம்

வைகுண்ட ஏகாதசி.. பெருமாளை வழிபடுவதின் முக்கியத்துவம் என்ன?

மாதத்திலே நான் மார்கழியாக இருப்பேன் என்று பகவத் கீதையில் கண்ணன் கூறி இருக்கிறார். அதனால் தான் ஆண்டாள் மார்கழியில் கண்ணனை நினைத்து திருப்பாவை பாடலை இயற்றி இருக்கிறார்.

Jayashree A

நாளை வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாட இருக்கிறது இதன் சிறப்பு என்ன? பார்க்கலாம்.

மாதத்திலே நான் மார்கழியாக இருப்பேன் என்று பகவத் கீதையில் கண்ணன் கூறி இருக்கிறார். அதனால் தான் ஆண்டாள் மார்கழியில் கண்ணனை நினைத்து திருப்பாவை பாடலை இயற்றி இருக்கிறார். அத்தகைய பெருமைவாய்ந்த மார்கழியில், பெருமாளுக்கு உகந்த நாளான ஏகாதசி மிகவும் விஷேஷமானது. ஏகாதசியில் முக்தி அடைந்த ஒருவருக்கு மறுபிறப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் தான் அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மர் கூட தனது உயிரை ஏகாதசி தினத்தன்று விட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட பெருமைவாய்ந்த ஏகாதசி உபவாசம் இருந்து பெருமாளை வழிப்பட்டால் மறுபிறவி கிடையாது என்கின்றனர் பெரியவர்கள்.

வைகுண்ட ஏகாதசி - சொர்க்க வாசல் திறப்பு

அப்படி என்ன மார்கழிக்கு பெருமை?

பொதுவாக மார்கழி மாதத்தில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யமாட்டார்கள் அதற்கு காரணம் இம்மாதம் முழுக்க முழுக்க பெருமாளையும், சிவனையும், சக்தியையும் தரிசிக்கும் ஒரு காலமாகும். நமக்கு ஒரு நாள் என்பது 24 மணி நேரம் ஆனால், தேவர்களுக்கு ஒருவருடம் என்பது ஒரு நாள் கணக்காகிறது. அதன்படி அவர்களுக்கு மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்த காலம். இந்நேரம்தான் அவர்கள் கடவுளை துதிப்பாடும் நேரம். ஆகையால் மார்கழியில் மற்ற வேலைகளுக்கு இடம் தராமல் நாமும் அவர்களுடன் இணைந்து பகவானை நினைத்துக்கொள்வதால் மற்ற மாதங்களை விட மார்கழி மிகவும் விஷேஷ மாதமாக கருதப்படுகிறது.

முக்கியமாக மார்கழியில் வரும் வைகுந்த ஏகாதசி அன்று உபவாசம் இருந்து துவாதசியில் அகத்தி கீரையும் நெல்லிக்காயும் உணவில் சேர்த்து உபவாசத்தை நிறைவு செய்தால், முழுவருட ஏகாதசி பலனை அடையலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. அதனாலேயே நாளை வரும் ஏகாதசி மிகவும் விஷேஷமானது.

நாம் எத்தகைய பாவங்களை செய்திருந்தாலும், நாளை உபவாசம் இருந்து பெருமாளை தரிசனம் செய்தால் நேராக வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதை உணர்த்துவதற்காகதான் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

இந்த ஏகாதசி திருநாளானது எல்லா பெருமாள் கோவிலிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். குறிப்பாக 108 திவ்ய தேசங்களில் இவ்வைபவத்தின் சிறப்பு அதிகம்.

வைகுண்ட ஏகாதசி - சொர்க்க வாசல் திறப்பு

எப்படி உபவாசம் இருக்கலாம்.

அதிகாலை அதாவது சூரிய உதயத்திற்கு முன்னதாக எழுந்து நீராடி பெருமாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு, விஷ்ணு சஹஸ்ரநாமத்தை கூறி உபவாசம் இருத்தல் வேண்டும் அதே போல் துவாதசி அன்றுகாலையில் 8 மணிக்குள்ளாக நாம் சாப்பிட்டு முடித்தல் வேண்டும். இது தான் முறை... ஆனால் இக்காலத்தில் அனைவரும் வெவ்வேறு வேலைகள் இருப்பதாலும், உடல் உபாதைகள் இருப்பதாலும், சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்சம் விதியை தளர்த்திக்கொள்ளலாம். அதே சமயத்தில் அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று பெருமாளை தரிசித்து அவரின் அனுக்கிரகத்தை பெறலாம்.