இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் திருப்பதி கோயிலும் ஒன்று. இங்கு தினமும் பல லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் தற்போது திருமலையில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தநிலையில் திருப்பதி தேவஸ்தானம் இதற்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கும் வகையில் புதிய கொள்கையைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். அத்துடன் தங்களது பக்தர்களுக்கு ஒரு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சிறப்பான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.. அது என்ன அறிவிப்பு என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் 16ம் தேதி அன்று புஷ்பயாகம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்கான டிக்கெட்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த மாதம் (ஆகஸ்ட்) ஆன்லைனில் வெளியிட உள்ளது. இந்த டிக்கெட் விலை ரூ. 700 ஆகும். இதில் அதிகபட்சமாக இரண்டு நபர்களுக்கு முன்பதிவு செய்ய முடியும். இந்த புஷ்ப அபிஷேகம் டிக்கெட் பெற்றவர்கள், காலை 6 மணிக்கு திருமலையில் உள்ள சுபதம் நுழைவு வாயில் வழியாக கோவில் வளாகத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெறும் அபிஷேக சேவையில் பங்கேற்கலாம். அதன் பிறகு, அவர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
பின்னர், அதே நாளில் இரண்டாவது முறையாக மதியம் 12:30 மணிக்கு அதே டிக்கெட் மூலம் பக்தர்கள் சுபதம் வாயில் வழியாக மலையப்ப சுவாமிக்கு நடைபெறும் புஷ்பயாகம் உற்சவத்தில் பங்கேற்று அதன்பிறகு பக்தர்கள் மீண்டும் மூலவரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதன் மூலம், ஒரு டிக்கெட்டில் ஒரே நாளில் இருமுறை சாமி தரிசனம் செய்யும் வாய்ப்பை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வழங்குகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, விஐபி தரிசனம், ரூ 300 சிறப்பு நுழைவு தரிசனம் ஆகியவை ஆந்திரா, தெலுங்கானா மாநில எம்பி, எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சிபாரிசு கடிதம் மூலமும், இதர மாநில எம்எல்ஏக்கள், எம்பிகள், ஐஏஎஸ் ஐபிஎஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நேரடியாக வருபவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் ஒரே மாதத்தில் பலமுறை சிபாரிசு கடிதங்கள் மூலம் சாமி தரிசனம் செய்கின்றனர். இதனால் இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருக்கக்கூடிய பக்தர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே சிபாரிசு கடிதத்தின் மூலம் சாமி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக சிறப்பு சாஃப்ட்வேரை தயார் செய்து ஆதார் உடன் இணைப்பதன் மூலம் ஒருமுறை சிபாரிசு கடிதத்தின் மூலம் விஐபி தரிசனம் உள்ளிட்ட டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் மீண்டும் ஒரு மாதம் கழித்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதனால் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காத்திருக்கும் நேரம் குறையும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.