அண்ணாமலையாரின் வரலாற்றை தெரிந்துக்கொள்ளலாமா?
காசியில் இறந்தால் முக்தி என்றும், திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்றும் கூறுவார்கள். பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும் குறிப்பிடப்படுகிறது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 233வது தேவாரத்தலமாகும். முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு இருப்பது போல் விநாயகருக்கும் அறுபடை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும். இத்தல இறைவன் அருணாச்சலேஸ்வரராகவும், அம்பிகை உண்ணாமலையம்மையாகவும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
தல வரலாறு
ஒருமுறை பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. இருவருக்குள்ளும் முடிவு தோன்றாததால், சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் அவர்கள் முன் ஜோதி வடிவில் தோன்றி, எனது அடி அல்லது முடியை எவர் கண்டு வருகிறீர்களோ அவரே உயர்ந்தவர் எனக்கூறினார். விஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்து சிவனின் பாதங்களைக்காண பூமிக்குள் சென்றார் ஆனால் முடியவில்லை. திரும்பி வந்து சிவனிடம் தன்னால் திருப்பாதங்களைக் கண்டறிய முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டார். பிரம்மா அன்னப்பறவையாக உருவெடுத்து சிவபெருமானின் திருமுடியை கண்டு வர மேலே கிளம்பினார். அவராலும் திருமுடியைக் காண முடியவில்லை. அப்பொழுது சிவபெருமான் தலையில் இருந்த தாழம்பூவானது கீழே விழுந்தது. அன்னப்பறவையாக மேலே சென்ற பிரம்மா தாழம்பூவிடம், ”நான் சிவபெருமானின் முடியை கண்டதாக கூறுவேன். நீ சாட்சியாக இரு...” என்று கூறவே, தாழம்பூவும் சரி என்று ஒப்புக்கொண்டது. சொன்னது போல பிரம்மாவும் சிவபெருமானிடம் தான் முடியைக்கண்டதாக கூறவே, தாழம்பூவும், பிரம்மாவுக்கு சாட்சியாக இருந்தது. பொய் கூறிய பிரம்மனுக்கு பூமியில் கோவில்கள் கிடையாது என்றும், தாழம்பூவை இனி தனது சிரசில் சூடமாட்டேன் என்று சிவபெருமான் இருவருக்கும் சாபமிட்டார். ஆகையால்தான் தாழம்பூவானது சிவபெருமானுக்கு அணிவதில்லை... இது புராணக்கதையாக இருந்தாலும், சிவபெருமான் ஜோதி வடிவாக பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் காட்சிக்கொடுத்த இடம் திருவண்ணாமலை என்று கூறப்படுகிறது.
ஜோதி வடிவாக காட்சி அளித்த சிவபெருமானே மலையாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அந்த மலை தான் கோயிலின் பின்புறம் அமைந்துள்ள அண்ணாமலை. பின்பு தன்னை வழிபாடு செய்வதற்கு ஏதுவாக லிங்கோத்பவராக காட்சி கொடுத்து அருளினார்.
விழாக்காலங்கள்
பிரம்மோற்சவம், ஆனி மாத பிரம்மோற்சவம், மாசி மகம் தீர்த்தவாரி, கார்த்திகை தீபம், பரணி தீபம், மகா தீபம், பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம், ஆகிய திருவிழாக்கள் ஆண்டு தோறும் நடைபெறுகிறது. வருடத்தின் எல்லா மாதங்களிலும் ஏதாவது ஒரு திருவிழா இத்தலத்தில் நடந்து கொண்டே இருப்பது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது. செவ்வாய் கிழமை அன்று வழிபடுவோர் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.
திரு வண்ணாமலையில் அமைந்துள்ள கோபுரங்களும் அதன் உயரமும்:
கிளி கோபுரம் - 81 அடி உயரம்
தெற்கே திருமஞ்சன கோபுரம் - 157 அடி உயரம்
தெற்கு கட்டை கோபுரம் - 70 அடி உயரம்
மேற்கே பேய் கோபுரம் - 160 அடி உயரம்
மேற்கு கட்டை கோபுரம் - 70 அடி உயரம்
வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் - 171 அடி உயரம்
வடக்கு கட்டை கோபுரம் - 45 அடி உயரம்.
மலையின் சிறப்புகள்
அண்ணாமலையானது கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் காட்சியளிக்கிறார். இம்மலையைச் சுற்றினால் முக்காலமும் செய்த பாவங்கள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை. ஆகையால் ஒவ்வொரு நாளும் பக்தர்கள் இம்மலையை சுற்றி வலம் வருகின்றனர். மலையைச் சுற்றிலும் எண்ணெற்ற ஆசிரமங்களும் தீர்த்தங்களும் அஷ்ட லிங்கங்களும் அமையப் பெற்றுள்ளன. இந்த மலையைச் ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம் என்பது சிறப்பு.
கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்கங்கள்:
1. இந்திரலிங்கம். 2. அக்னி லிங்கம், 3. எமலிங்கம், 4. நிருதி லிங்கம், 5. வருண லிங்கம், 6. வாயுலிங்கம், 7. குபேர லிங்கம், 8. ஈசான லிங்கம்.
கிரிவலம்
கிரிவலத்தைத் தொடங்குவதற்கு முன்பு திருவண்ணாமலை கோயிலுக்கு அருகே இருக்கும் பூத நாராயணரைத் தரிசித்து அனுமதி பெற வேண்டும். பூத நாராயணர்தான் திருவண்ணாமலையின் காவல் தெய்வம். அவரை வணங்கிவிட்டுப் புறப்பட்டால் எந்தவித இடையூறும் இல்லாமல் கிரிவலத்தை முடிக்க முடியும் என்பது நம்பிக்கை.
பின்னர் வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்க வேண்டும். அதன் பிறகு ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு கோயில் ராஜ கோபுரத்தை வணங்கிவிட்டு மலையை வலம் வரத் தொடங்க வேண்டும். கிரிவலத்தை இப்படித்தான் தொடங்க வேண்டும் என்பது நியதி.
கிரிவலப்பாதயில் நம்முடன் அரூபமாக அல்லது உருவமாக சித்தர்களும் வலம் வருவார்கள் என்பது நம்பிக்கை. ஆகையால், இறைவனை நினைத்து நமச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டு கிரிவலம் வரவேண்டும். இப்படி செய்வதால் நாம் நினைப்பது நடக்கும் என்பதும் நம்பிக்கை. பௌர்ணமி நாளில் கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
மகா தீபம் பரணி தீபம்
கார்த்திகை மகாதீபம் இக்கோயிலில் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவின் இறுதி நாளன்று காலை பரணி தீபம் ஏற்றப்படும் அன்று மாலை 6 மணிக்கு மேல் அண்ணாமலையாருக்கு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு, பத்து தீபங்களையும் மேளதாளத்துடன் வெளியே எடுத்துச் செல்லப்பட்டு கொடிக்கம்பம் அருகேயுள்ள தீபக்கொப்பரையில் ஒன்று சேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். அச்சமயம் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.