வையம்காத்த பெருமாள்
வையம்காத்த பெருமாள் PT
கோயில்கள்

திவ்ய தேசம் - 8: தஞ்சாவூர் வையம் காத்த பெருமாள் திருத்தலத்திற்கு பின்னால் இப்படி ஒரு கதையா?

Jayashree A

108 திவ்ய தரிசனத்தில் இன்று நாம் எட்டாவது திருத்தலமான தஞ்சாவூருக்கு அருகில் உள்ள ஐயம்பேட்டையில் இருக்கும் வையம் காத்த பெருமாள் ஸ்தலத்தை பற்றி காணப்போகிறோம். இத் தலத்திற்கு திருக்கூடலூர் என்ற பெயரும் உண்டு.

திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம்

தீர்த்தம்: சக்கர தீர்த்தம்

மூலவர் : வையம் காத்த பெருமாள்

உற்சவர்: ஜெகத்ரட்சகன்

தாயார்: பத்மாசனவல்லி

தலவிருட்சம்: பலாமரம்

தீர்த்தம்: சக்கர தீர்த்தம்

புராண பெயர்: சங்கமாபுரி.

வையம் காத்த பெருமாள் அதாவது பூமாதேவியை காத்தவர். ஒருமுறை இரண்யாட்சன் என்னும் அரக்கன், பூமாதேவியை வேறு உலகத்தில் உள்ள கடலுக்கு அடியில் ஒளித்து வைத்துவிட்டான். ஆகையால் பிரம்மாவால் படைப்பு தொழிலை பார்க்கமுடியவில்லை. ஆகையால் அவர் விஷ்ணுவிடம் வேண்டிக்கொள்ள பெருமாள் பூமாதேவியை காக்கும் பொருட்டு வராக அவதாரம் எடுத்து பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற இரண்யாட்சன் என்ற அசுரனுடன், போர் செய்து பூமியை காப்பாற்றினார் என்று புராணங்கள் கூறுகிறது. இத்திருத்தலத்தில் தான் பூமியை குத்திக்கொண்டு உள்ளே சென்றார் எனவும் வெளியில் வந்த ஸ்தலம் பூவராக சுவாமியின் திருத்தலமான ஸ்ரீ முஷ்ணம் எனவும் புராணாங்கள் கூறுகின்றன.

கூற்றேரு ருவிற் குறளாய் நிலநீரேற்றானெந்தை பெருமானூர் போல் செற்றேர் உழவர் கோதை போதூண் கோற்றேன் முரலுங் கூடலூரே.. என்று திருமங்கை ஆழ்வார் பாசுரம் இயற்றி இருக்கிறார்.

திருத்தல வரலாறு :

அம்பரீசன் என்னும் அரசன் பெருமாள் மீது தீவிர பக்தி கொண்டிருந்தான். ஒரு சமயம் அவன் ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசி பாராயணம் செய்ய முற்பட்ட சமயம் துர்வாசர் முனிவர் அவன் இருப்பிடம் வந்தார். அதிதீக்கு விருந்தளிக்க எண்ணிய அம்பரீசன் துர்வாசர் நித்திய கடன்களை அனுஷ்டித்து வர வரைக்கும் காத்திருந்தான். ஆனால், துர்வாசர் காலதாமதம் எடுத்துக்கொண்டார். குறிப்பிட்ட நேரத்துக்குள் துவாதசி பாராயணம் செய்யாமல் போனால் ஏகாதசி விரதம் இருந்த பலன் அவனுக்கு கிடைக்காமல் போகும். ஆகவே. துர்வாசர் உணவருந்தும் முன்பு தான் உணவருந்துவதும் பாவத்திற்குரிய செயலாகும். அதனால், என்ன செய்யலாம் என்று யோசித்த அவன், நீரை மட்டும் அருந்திவிட்டு ஏகாதசி விரதத்தை முடித்துக்கொண்டான்.

இதை தெரிந்துக்கொண்ட துர்வாசர் அவனை சபிக்க எண்ணினார். இது குறித்து கவலை பட்ட அம்பரீசன் பெருமாளை வேண்டிக்கொண்டான். பெருமாளோ செய்யாத தவறுக்காக தன் பக்தன் தண்டிக்கப்படுவதை அவர் விரும்பாததால், தனது சுதர்சன சக்கரத்தை அனுப்பினார். அது துர்வாசரை துரத்த ஆரம்பித்தது. செய்வதறியாது திகைத்த துர்வாசர், பெருமாளிடத்தில் தன்னை காப்பாற்றும் படி முறையிட்டார்.

ஆனால் பெருமாளோ.. துர்வாசரிடத்தில், “இது என்னால் இயலாது. அம்பரீசனால் தான் முடியும். ஆகவே நீ அவனிடத்தில் மன்னிப்பு கேள்” என்றார். பிறகு துர்வாசர் அம்பரீசனிடத்தில் மன்னிப்பு கேட்க.. அம்பரீசன் சுதர்சன சக்கரத்தை திரும்ப பெருமாளிடமே சென்றுவிடுமாறு வேண்டவும், மறுபடியும் சுதர்சன சக்கரமானது பெருமாளிடம் சென்றதாக புராணங்கள் கூறுகிறது. அம்பரீசன் இவ்விடத்தில் பெருமாளுக்கு கோவில் கட்டி இருக்கிறான். ஆனால் நாட்கள் செல்ல செல்ல... கோவில் சிதலமடைந்து இருக்கிறது. மறுபடியும் இத்தலமானது ராணி மங்கமாவால் புரணமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

இத்தலத்தில் வந்து வழிபடுபவர்களின் பாவம் அனைத்தும் தீர்ந்து விடும் எனவும் நம்பிக்கை உண்டு. அதற்கு புராணங்கள் கூறும் கதை ஒன்றைப் பார்க்கலாம்.

உலகில் உள்ள புண்ணிய நதிகளில் நீராடினால் பாவங்கள் அனைத்தும் தீரும் என்பர். அந்த புண்ணிய நதிகள் அனைத்தும் காவிரியில் சேர்ந்து தங்கள் மீது சேர்ந்த பாவங்களை போக்கிக் கொள்ளும் என்பது ஐதீகம். அப்படி பெருமை வாய்ந்தது காவேரி. அவ்வாறு மொத்த பாவங்களும் சேரப்பெற்ற காவிரியானது தன் பாவங்கள் தீர பிரம்மாவிடம் வழி கேட்டாள். பெருமாளும் அவளிடத்தில், இத்தலத்தில் உள்ள பெருமாளை வழிபட பாவங்கள் நீங்கும் என்றார். அதன்படி காவேரி இத்தளத்தில் பெருமாளை வேண்டி தன் பாவங்களை போக்கி கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன. அதனால் எப்பேர்பட்ட பாவங்கள் அனைத்தும் நீக்கும் சிறப்பு பெற்றது இத்திருத்தலம்.

இத்தலத்தின் சிறப்பு பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசத்தின் கருவறைக்குப் பின்புறத்தில் சுவாமிக்கு இடது புறத்தில் தல விருச்சமான பலா மரத்தில் இயற்கையாகவே சங்கு வடிவம் தோன்றியிருக்கிறது.