திருப்பதி
திருப்பதி கோப்புப் படம்
கோயில்கள்

திருப்பதியில் சாமி தரிசனத்துக்காக இத்தனை மணி நேரம் காத்திருப்பா? காரணம் என்ன?

PT WEB

திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய 30 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் தரிசன நேரத்தை துரிதப்படுத்த தேவஸ்தானம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உலக பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில், கோடை விடுமுறையால் அன்றாடம் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் நாள்தோறும் பக்தர்கள் 30 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். அங்குள்ள பக்தர்கள் தங்கும் அறைகள் முழுவதுமாக நிரம்பி உள்ளதால் பக்தர்கள் 4 கி.மீ.நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதி

நேற்றைய நிலவரப்படி, 85,297 பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், ₹3.71 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஒரு லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர் என எதிர்பார்க்கப்படுவதால் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவஸ்தானம் செய்துள்ளது.

30 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் பல கிலோ மீட்டர் காத்திருப்பதால் அவர்கள் துரிதமாக தரிசனம் செய்யும் வகையில் அபிஷேக சேவைகள், திருப்பாவாடை சேவைகள் வழக்கமாக செய்யப்படுவதை விட துரிதமாக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச தரிசனத்திற்கான நேரத்தை மிச்சப்படுத்தி சீக்கிரமாக தரிசனம் செய்யும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பக்தர்கள் பல கிலோ மீட்டர் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்வது குறைந்து சீக்கிரத்தில் தரிசனம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.