மாதிரி புகைப்படம்
மாதிரி புகைப்படம் PT
கதைகள்

ஜராசந்தனை பீமன் ஏன் அழித்தான்? ஜராசந்தனை உயிர்பித்தது ஒரு அரக்கியா?

Jayashree A

ஜராசந்தன் யார்? இவரின் கதை என்ன என்பதை பார்க்கலாம்.

மகத தேசத்தை பிருகத்ருதன் என்ற அரசன் ஆண்டு வந்தான். மிகவும் திறமையுடன் புத்திசாலிதனத்துடன் ஆட்சி செய்து வந்தவனை கண்ட, காசி ராஜன் என்ற அரசன் தனது இரு பெண்களை பிருகத்ருதனுக்கு திருமணம் செய்து கொடுத்தான். இரு பெண்களை மணந்தும் பிருகத்ருதனுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கவில்லை.

ஆகவே புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான், ஆனாலும் புத்திரபாக்கியம் கிடைக்கவில்லை. என்ன செய்வது என்று கவலைக்கொண்ட சமயம், சண்டகௌசிக ரிஷி என்பவரை பிருகத்ருதன் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் தனது கவலையைத் தெரிவித்து, எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன வழி? என்று கேட்டான்.

பிருகத்ருதனின் கவலையை தெரிந்துக்கொண்ட சண்டகௌசிக ரிஷியும் தன் தவ பலத்தால் ஒரு மாங்கனியை பூஜித்து மன்னரிடம் கொடுத்து, “இந்த மாங்கனியை உன் மனைவியை உட்கொள்ள சொல். உனக்கு அழகான மகன் பிறப்பான்” என்று கூறினார்.

பிருகத்ருதன் மிகுந்த மகிழ்சியுடன் ரிஷி கொடுத்த மாம்பழத்தை தனது மனைவிகளிடம் கொடுத்தான். மனைவிகள் இருவரும் மாம்பழத்தை சமமாகப் பிரித்து உண்டனர். பின்னர், இருவரும் கர்ப்பம் தரித்தனர்.

மாம்பழத்தை இருவரும் பிரித்து உண்டதால் இருவரும் பாதி பாதி குழந்தையை பெற்றனர். அதைக்கண்டு மனைவிகள் இருவரும் பயந்து அந்த பிண்டங்களை தாதிகளிடம் கொடுத்து அப்பிண்டங்களை அழிக்க கட்டளை இட்டனர். தாதி அப்பிண்டங்களை ஒரு காட்டினில் எறிந்து சென்றாள்.

அக்காட்டில் ஜரை என்ற அரக்கியின் கைகளில் அக்குழந்தையின் பிண்டம் கிடைத்தது. பிண்டங்களை எடுத்து ஒன்றாக வைத்து பார்த்தாள். அப்பிண்டம் இரண்டும் ஒட்டி ஒரு குழந்தையாக மாறி உயிர்பெற்று வீரிட்டு அழுதது. அதைக்கண்டு பரிதாபம் கொண்ட ஜரை அரக்கி அதனை அரசனிடமே கொடுத்துவிட்டாள். அரக்கியால் தன் குழந்தை உயிர்பெற்றதால் அதற்கு ஜராசந்தன் என்று பெயரிட்டான் பிருகத்ருதன்.

ஜராசந்தன் தனது தந்தைக்குப் பிறகு மகத நாட்டை விரிவு செய்து ஒரு சிறந்த அரசனாக இருந்தான். அவனுக்கு ஜீவயாசாவை என்ற பெண் இருந்தாள். அவளை வீரமிக்க அரசனுக்கு திருமணம் செய்து கொடுக்க நினைத்தவர் தனது மகளை கம்சனுக்கு மணமுடித்து தந்தார்.

கம்சனின் அராஜகம் அதிகரித்ததால் கிருஷ்ணர் கம்சனை வதம் செய்தார். கம்சன் கிருஷ்ணனின் கையால் இறந்தான் என்ற செய்தி ஜராசந்தனுக்கு தெரிந்ததும், கிருஷ்ணன் மேல் பகைமைக்கொண்டு கிருஷ்ணன் ஆட்சி செய்த மதுராவின் மீது போர் தொடுத்தான். அதில் ஜராசந்தன் தோற்றான். இருப்பினும் கிருஷ்ணரை அழித்தே தீர்வது என்ற எண்ணம் கொண்டு மீண்டும் மீண்டும் மதுராவின் மீது போர் தொடுத்தான். கிருஷ்ணரும் மதுராவை விட்டு துவாரகைக்கு சென்றார். அங்கு சென்றாலும் ஜராசந்தன் கிருஷ்ணனை விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் போர் புரிந்தான்.

ஜராசந்தனை அழிக்க நினைத்த கிருஷ்ணன் அர்ஜுனன், பீமனுடன் ஜராசந்தனை போர்புரிய தூண்டினார். பீமன் ஜராசந்தனுடன் போரிட்டான். ஆனால், ஜராசந்தனை பீமனால் அழிக்க முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் பீமன் தடுமாறுகையில் கிருஷ்ணன் தனது சைகயால் பீமனுக்கு வழிகாட்டவும் , அதைப் புரிந்துக்கொண்ட பீமன் ஜராசந்தனை இரண்டு துண்டுகளாக பிளந்து அவனை அழித்தான் என்று புராணங்களில் ஜராசந்தனின் கதை சொல்லப்பட்டுள்ளது.