எறிபத்தநாயனார்
எறிபத்தநாயனார் PT
கதைகள்

”யாராக இருந்தாலும் வெட்டுவேன்” யானையின் தும்பிக்கையை துண்டித்த "எறிபத்த நாயனார்".. ஏன் இத்தனை கோபம்?

Jayashree A

நாயன்மார் 63 மூவரில் எறிபத்த நாயனாரின் வாழ்க்கை வரலாறு சற்றே வேறுபடும். பக்தி தான் இக்கதையின் சாராம்சம். எறிபத்த நாயனார் சிவபெருமான் மேல் எத்தகைய பக்தியைக்கொண்டிருந்தார் என்றும், அதன் தீவிரம் என்ன என்பதையும் தெரிந்துக்கொள்ளலாம். வாருங்கள் கதைக்குள் செல்லலாம்.

கருவூரில் எறிபத்த நாயனார் என்று ஒருவர் இருந்தார். இவர் சிவ பக்தியிலும் அடியவர் பக்தியிலும் சிறந்து விளங்குபவர். இவருக்கு ஒரு குணம் உண்டு. சிவனடியாருக்கும், சிவதொண்டு புரிபவர்களுக்கும், யாரேனும் தீங்கிழைத்தால் அல்லது அவர்களுக்கு துரோகம் இழைத்தால் அவர்களை அழித்து விடுவார். அத்தனை சிவபக்தி கொண்டவர். அதனாலேயே தனது கையில் எப்பொழுதும் மழுப்படை ஏந்தி ஊரையே வலம் வந்துக்கொண்டிருந்தார்.

அதே கருவூரில் சிவகாமியாண்டார் என்ற ஒரு சிவனடியார் ஒருவரும் இருந்தார். இவர் நாள்தோறும் பூக்களை பறித்து அதை கூடைகளில் சேகரித்து அங்கிருக்கும் ஆனிலைப்பெருமானுக்கு காணிக்கையாக்கிக்கொண்டிருப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்.

அவ்வாறு ஒரு சமயம் அவர் பூக்கூடை சுமந்து வரும் சமயம், அந்நாட்டு அரசர் புகழ்ச் சோழரின் பட்டத்து யானையானது சிவகாமியாண்டார் சுமந்து வந்த பூக்கூடையை தட்டிவிட்டது. பூவானது வீதிகளில் விழுந்து பலபேரின் கால்களில் மிதிபட்டது. இச்செய்தியானது எறிப்பத்தர் காதுகளை எட்டியது. கோபம் கொண்ட எறிபத்தர், சிவனடியவர்களுக்கு துன்பம் கொடுப்பது யானையாக இருந்தாலும் அதை தண்டித்தே ஆக வேண்டும் என நினைத்து தன் கையிலிருந்த மழுவால் யானையின் தும்பிக்கையை வெட்டினார். யானையும் மாண்டு விட்டது.

எறிபத்தரின் இச்செயல் வீரர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் எறிபத்தரை தாக்க முற்பட்டனர். எறிபத்தர் அவர்கள் அனைவரையும் தன் கையிலிருந்த மழுவால் வெட்டி சாய்த்தார். இச்செய்தி அரசர் புகழ்சோழரின் காதுக்குச் சென்றது. வெகுண்ட அவர், “யார்... என் யானையையும், வீரர்களையும் கொன்றது....” என்று கோபத்துடன் வந்தவரிடம், நடந்ததனைத்தையும் எடுத்து கூறினார் எறிப்பத்தர்.

எறிப்பத்தரின் இச்செயல் மன்னருக்கு சரி என்று படவே, அரசர் தனது வாளை உறுவி எறிப்பத்தரிடம் தந்து, “அடியவரே யானை செய்த தவறுக்கு யானையை மட்டும் அல்லாது அதன் சொந்தகாரனான என்னையும் கொல்லவேண்டும், கொன்றுவிடுங்கள்” என்று எறிப்பத்தரிடம் மண்டியிட்டு கைக்கூப்பினார்.

மன்னரின் இச்செயல் மன்னவரின் சிவபக்தியை உணர்த்தியது. எறிப்பத்தர் புகழ்ச்சோழரிடம், “அரசரே... நீர் தூய சிவத்தொண்டர் என்பதை நிருபித்துவிட்டீர். உங்களின் இச்செயலுக்கு நான் தான் உயிர் நீக்கவேண்டும்” என்று கையிலிருந்த வாளால் தனது கழுத்தை அறுத்துக்கொள்ள சென்ற சமயம், அரசர் அவரை தடுத்து. “அடியவரே உங்களின் இச்செயல் என்னை தீராப்பழிக்கு ஆளாக்கிவிடும்.” என்று கூறிய சமயத்தில், சிவபெருமான் அவர்கள் இருவரின் முன் தோன்றி, அவர்களின் பக்தியைக்கண்டு மனமகிழ்ந்து, “அடியவர்களே.. உங்கள் இருவர் பக்தியை உலகம் அறிந்துக்கொள்ள வேண்டும் என்றே இந்த விளையாட்டை நான் அரங்கேற்றினேன்.” என்று கூறியதாக புராணங்கள் கூறுகிறது. அதன் பின் வந்த சில காலங்கள் சிவத்தொண்டிலும், சிவ பக்தியிலும் ஈடுபட்ட எறிப்பத்தநாயனார் இறுதியில் சிவபதம் அடைந்தார். “ஓம்... நமச்சிவாய....”