சபரிமலையில் குவிந்த பக்தர்கள் pt desk
ஆன்மீகம்

ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம் - புத்தாண்டு அதிகாலை முதலே சபரிமலையில் குவிந்த பக்தர்கள்

ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனத்திற்காக, நேற்று அதிகாலை முதலே சரண கோஷத்துடன் சபரிமலையில் குவிந்த பக்தர்கள்.

PT WEB

செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பனை புத்தாண்டு தினத்தில் தரிசித்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பதும், வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று வருங்காலம் சிறக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அந்த வகையில் ஆண்டு இறுதி தினமான டிசம்பர் 31ம் தேதி இரவே, ஐயப்ப பக்தர்கள் புத்தாண்டு தரிசனத்திற்காக சபரிமலையில் குவியத் துவங்கினர்.

Sabarimalai

தினசரி 70 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முடியும் என்ற கேரள உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளது. எனவே சபரிமலை புத்தாண்டு தினத்திற்கான முன்பதிவு பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டது. ஆனாலும், தினசரி உடனடி முன்பதிவு 10 ஆயிரம் என்றிருந்தாலும், எப்படியும் உடனடி முன்பதிவு செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் திரளான பக்தர்கள் சபரிமலை வந்ததால், டிச. 31 அன்று இரவில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அதிகாலை 3 மணிக்கு நடை திறந்ததில் இருந்தே அலை அலையாக ஐயப்ப பக்தர்களின் புத்தாண்டு தரிசனம் துவங்கியது. சன்னிதான பெரிய நடைப்பந்தலில் இருந்து பக்தர்கள் கட்டம் கட்டமாக அனுப்பி வைகப்பட்டனர். பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க 18ம் படியில் பக்தர்களை ஏற்றிவிடும் வேகம் கூட்டப்பட்டது. தரிசன வரிசையும் விரைவுபடுத்தப்பட்டன. ஆனாலும் இடைவிடாது தொடரும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் திணறி வருகிறது சபரிமலை.

ஐயப்ப பக்தர்கள்

இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும். அந்த நிமிடம் வரை ஆங்கில புத்தாண்டு தரிசனம்தான் என்பதால், எப்படியும் ஐய்யப்பனை புத்தாண்டில் தரிசித்து விடலாம் என்ற நம்பிக்கையிலும், எதிர்பார்ப்பிலும் ஐயப்ப பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.