மிலாது நபி
மிலாது நபி freepik
ஆன்மீகம்

மிலாது நபி: முதலமைச்சர் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

PT WEB

மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன் சிறு தொகுப்பை இங்கு பார்க்கலாம்

முதல்வர் ஸ்டாலின் மிலாது நபி வாழ்த்து:

“ ‘ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்’ என்ற மகத்தான மனிதநேயத்திற்குச் சொந்தக்காரரான அண்ணல் நபிகளாரின் சீரிய போதனைகளும் சிறந்த அறிவுரைகளும், செழுமையான வழிகாட்டுதல்களும், ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டியவை. மட்டுமின்றி, அவை பொன்னைப்போல் பாதுகாக்கப்பட வேண்டியவை! அண்ணல் நபிகளாரின் நற்போதனைகளிலிருந்து வழுவாமல் வாழ்ந்துவரும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த மீலாதுன் நபி நன்னாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்து மகிழ்கின்றேன்”

விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து:

“சகோதரத்துவமே மானுடத்தின் மீட்சிக்கு அடிப்படை என்பதைப் போதித்தவர். உலக மாந்தர்கள் யாவரும் உயர்வு - தாழ்வு என்னும் பாகுபாடுகளின்றி, பகை- மோதல் ஏதுமின்றி ஒரே குலமாக வாழ்வதற்கு சகோதரத்துவம் தான் இன்றியமையாதது என வலியுறுத்தியவர். அத்தகைய சகோரத்துவத்தை இன்றும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்குரிய மகத்தான வழிகாட்டுதலை வழங்கிய மகான் நபிகள் நாயகம். இத்தகு மகத்தான தலைமைத்துவ ஆற்றல் வாய்ந்த மகானின் பிறந்தநாளான 'மீலாது நாளை' "உலக சகோதரத்துவ நாளாக’ கடைபிடிப்போம். சகோதரத்துவத்தைப் போற்றும் யாவருக்கும் விசிக சார்பில் மீலாதுநபி தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து:

“இறைத் தூதரின் போதனைகளை பின்பற்றி அமைதி, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவை தழைத்தோங்க பாடுபடுவோம் என இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம். உலகம் தழைக்க வந்த உத்தமராம் இறைத் தூதர் அவர்களின் பிறந்த நாளில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மீலாதுன் நபி வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்”.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

“இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மிலாது நபி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இவர்களை போலவே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.