திருப்பாவை, திருவெம்பாவை  புதியதலைமுறை
ஆன்மீகம்

மார்கழி மாதம் 9ம் நாள்: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களின் சிறப்பு

மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன. இந்த மார்கழி மாதத்தில் இவை இரண்டிலும் தலா ஒரு பாடலையும், அதன் பொருளையும் நாம் பார்த்து வருகிறோம். இதில் ஒன்பதாம் நாளான இன்று..

Jayashree A

மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன. இந்த மார்கழி மாதத்தில் இவை இரண்டிலும் தலா ஒரு பாடலையும், அதன் பொருளையும் நாம் பார்த்து வருகிறோம். இதில் ஒன்பதாம் நாளான இன்று..

திருப்பாவை திருவெம்பாவையின் பிற பாடல்களையும் விளக்கத்தையும் இங்கே வாசிக்கலாம்...!

திருப்பாவை

ஆண்டாள் தனது தோழியை உரிமையாக மாமன் மகளே... என்று கூறி எழுப்புகிறார். அதுவும் எப்படித்தெரியுமா...

தூயமணிகள் பளிங்கு மாளிகையில், சுற்றி விளக்கு எரிய, சாம்பிராணி மணக்க, பஞ்சுமெத்தையில் உறங்கிக்கொண்டு இருக்கிறார் அவர். அப்போது ஆண்டாள், 'மாமன் மகளே... மணிக்கதவை தாழ்திறவாய்.. மாமி அவளை எழுப்புங்கோ.. உங்க பெண் ஊமை காது செவிடா, சோம்பேறி, அல்லது மந்திரபட்டாளா...’ என்கிறார்.

பாடல்

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்

மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்

மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்

ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?

ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

பொருள்

“தூமணி மாடத்து சுற்றும் விளக்கெறிய.... நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட பளிங்கு மாளிகையில் சுற்றும் விளக்கொளி எரிய...

தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்... ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற நறுமணம் பொருட்கள் மணம் வீச... பஞ்சு மெத்தையில் உறங்கும்,

மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்.... மாமன் மகளே... கதவைத்திற...” என்கிறார் ஆண்டாள். அதன் பின்னும் தோழி கதவை திறக்காமல் போகவே... அவரது தாயை மாமி அவளை எழுப்புங்கள் என்று அழைக்கிறார்.

திருப்பாவை ஆண்டாள்

தொடர்ந்து, “ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?... நாங்கள் இத்தனைபேரும் அவளை அழைக்கிறோம். அவள் என்ன ஊமையா அல்லது காது செவிடா, சோம்பேறி அல்லது மந்திரத்தால் மயங்கி கிடக்கிறாளா...

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.... எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும் அவளை எழுப்புங்கள்” என்று கூறியதாக அழகாக பாசுரத்தை இயற்றி இருக்கிறார்.

திருவெம்பாவை

மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவையில் 9ம் நாளான இன்று அண்ணாமலையாரை தரிசிக்க தோழிகள் தோழியை எழுப்புகிறார்கள்... எப்படி தெரியுமா?

பாடல்:

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே

உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்

உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எம் கணவர் ஆவார்

அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்

இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.

இதன் பொருள்:

பழமையான பொருள் இது என்று சொல்லப்படும் பொருட்களுக்கெல்லாம் பழமையானவனே! புதுமைக்கெல்லாம் புதுமையான சிவனே! உன்னை தலைவனாகக் கொண்ட நாங்கள், உனது அடியார்களுக்கு மட்டுமே பணிவோம். அவர்களுக்கே தொண்டு செய்வோம். உன் மீது பக்தி கொண்டவர்களே எங்களுக்கு கணவராக வேண்டும். அவர்கள் இடும் கட்டளைகளை எங்களுக்கு கிடைத்த பரிசாகக் கருதி, மிகவும் கீழ்ப்படிதலுடன் பணி செய்வோம். இந்த பிரார்த்தனையை மட்டும் நீ ஏற்றுக் கொண்டால், எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்ற நிலையைப் பெறுவோம்.