மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன. இந்த மார்கழி மாதத்தில் இவை இரண்டிலும் தலா ஒரு பாடலையும், அதன் பொருளையும் நாம் பார்த்து வருகிறோம்.
அதன்படி ஆறாம் நாளான இன்றும் இரு பாடல்கள் மற்றும் அதன் பொருட்களை பார்க்கலாம்...
திருப்பாவை திருவெம்பாவையின் பிற பாடல்களையும் விளக்கத்தையும் இங்கே வாசிக்கலாம்...!
மார்கழி ஆறாம் நாளான இன்று ஆண்டாள் பாவைநோன்பு இருக்க விரும்பி தனது தோழிகளை எழுப்புகிறார் தலைவி. தோழிகள் எழுந்திருக்க மனமில்லாமல் படுத்து இருக்க... அவர்களை உற்சாகமூட்டும் வகையில், கண்ணனின் பெருமைகளைக்கூறி அவர்களை எழுப்புகிறார். அதன்படி குழந்தையான கண்ணனைக் கொல்வதற்காக கம்சன் அனுப்பிய பூதங்கி மற்றும் சகடனின் உயிரை பறித்து அவர்களுக்கு மோட்சம் அளித்த கண்ணனின் கதையை இந்த பாசுரத்தில் இயற்றியுள்ளார் ஆண்டாள்.
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
இந்த பாசுரத்தின் பொருள்:
“தோழியே! நீ உடனே எழுந்திரு! விடிந்ததற்கு அறிகுறியாக பறவைகள் கீச்சிடும் இனிய ஒலி உன் காதில் விழவில்லையா? கருடனை வாகனமாக கொண்ட விஷ்ணுவின் கோவிலில் வெண்சங்கொலி ஓசை உனக்கு கேட்கவில்லையா? இளம் பெண்ணே! எழுந்திரு!
பூதனா என்றும் அரக்கியை வதைத்து, வஞ்சகமான சகடாசுரன் வண்டி உருவில் வந்த போது கட்டுக் குலையும்படி காலால் உதைத்தான் கிருஷ்ணன்!
பாற்கடலில் பாம்பின் மேல் துயில் கொண்டு, உயிர்களுக்கெல்லாம் தலைவனான அவனை முனிவர்களும் யோகிகளும் ’ஹரி ஹரி’ என்று சொல்லும் குரலுமா உனக்கு கேட்கவில்லை? தோழியே, உடனே எழுந்து இவற்றை கேட்பாயாக” என்று கூறுகிறார் தலைவி.
இன்றும் திருவண்ணாமலையில், அண்ணாமலை மற்றும் உண்ணாமலையாராக அதிகாலை வேளையில் வீதியில் உலா வருகிறார். அவரின் தரிசனத்தைக்காண்பதற்காக தோழிகள், மற்றத்தோழிகளை எழுப்புவதாக மாணிக்கவாசகர் இப்பாடலை இயற்றியுள்ளார்.
பாடல்:
மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்
பொருள்:
“மான் போன்ற நடையை கொண்ட தோழியே... நேற்று நீ எங்களிடம் என்ன சொன்னாய்?... உங்களை நானே வந்து அதிகாலையில் எழுப்புவேன் என்றாய். ஆனால், நாங்கள் வந்து உன்னை எழுப்பும்படியாகி விட்டது. ஆனால்... நீ சொன்னதைச் செய்யவில்லையே என்று கொஞ்சமாவது வெட்கப்பட்டாயா? உனக்கு இன்னும் பொழுது புலரவில்லையா? வானவர்களும், பூமியிலுள்ளாவர்களும் பிற உலகில் உள்ளவர்களும், அறிய முடியாத தன்மையை உடைய சிவபெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வந்த எங்களுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாய். அவனை நினைத்து உடலும் உள்ளமும் உருகாமல் இருப்பது உனக்கு மட்டுமே பொருந்தும். எனவே உடனே எழுந்து நாங்களும் மற்றையோரும் பயன்பெறும் விதத்தில் நம் தலைவனைப் புகழ்ந்து பாடு” என்று பொருள் தருவதாக இந்த பாடல் அமைந்துள்ளது.