திருப்பாவை, திருவெம்பாவை  புதியதலைமுறை
ஆன்மீகம்

மார்கழி மாதம் 17ம் நாள் | திருப்பாவை - திருவெம்பாவை.. ஆண்டாள், சிவபெருமான் பாடல்களின் சிறப்பு!

மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன.

Jayashree A

மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன.

இந்த மார்கழி மாதத்தில் 17ம் நாளான இன்று...

திருப்பாவை திருவெம்பாவையின் பிற பாடல்களையும் விளக்கத்தையும் இங்கே வாசிக்கலாம்...!

தோழிகள் அனைவரையும் அதிகாலையில், எழுந்தவுடன் அனைவரும் நீராடிவிட்டு, பாவை நோன்பு நூற்பதற்கு தயாராகின்றனர். முன்னதாக, ஆலயத்திற்கு செல்கின்றனர். அங்கு இறைவனை எழுப்புகின்றனர். அப்படியென்றால், பொழுது விடிவதற்கு முன்னதாக, கண்ணனின் மேல் கொண்ட காதலால், பொழுது விடிந்து விட்டதாக நினைத்த ஆண்டாள் தன் தோழிகளை எழுப்பி நீராடிவிட்டு, ஆலயத்திற்கு சென்று இறைவனை எழுப்புகிறார்.

திருப்பாவை ஆண்டாள்

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த

உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.

இதற்கான பொருள்

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா!.... ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே!

எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே!... தாங்கள் எழுந்தருள வேண்டும்.

குலவிளக்கே! எம்பெருமாட்டி யசோதாய்! ... பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே!

அறிவுறாய்! அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர்கோமானே... மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ எழ வேண்டும். விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும்.

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்... செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே! நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும் என்கிறார்.

அடுத்ததாக சிவபெருமானின் பெருமையக்கூறும் திருவெம்பாவை...

செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்

எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்

கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி

இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை

அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்

பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.

இதன் பொருள். தேன்சிந்தும் மலர்களைச் சூடிய கருங்கூந்தலை உடைய பெண்களே! செந்தாமரைக் கண்ணனான நாராயணன், பிரம்மா, பிற தேவர்கள் யாரும் தராத இன்பத்தை அள்ளி வழங்க நம் தலைவனாகிய சிவபெருமான், இதோ! வீடுகள் தோறும் எழுந்தருளுகிறான். அவனது தாமரை போன்ற திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சேவகன் போல் இறங்கி வருகிறான். அழகிய கண்களை உடையவனும், அடியவர்களுக்கு அமுதமானவனும், நமது தலைவனுமான அந்தச் சிவனை வணங்கி நலம் பல பெறும் பொருட்டு, தாமரை மலர்கள் மிதக்கும் இந்த பொய்கையில் பாய்ந்து நீராடி அவன் தரிசனம் காண தயாராவோம்.