சகுனி
சகுனி கோப்புப்படம்
ஆன்மீகம்

சாதுர்யத்தால் கண்ணனுக்கு நிகராக நின்ற சகுனி! அவரின் நியாயம் குற்றமா? மகாபாரதம் உணர்த்தும் நீதி என்ன?

Jayashree A

சகுனி காந்தார நாட்டு இளவரசன். தனது சகோதரியான காந்தாரியின் மேல் அளவு கடந்த ப்ரியம் கொண்டிருந்தார். காந்தாரியை நல்ல ஒரு இடத்தில் விவாகம் செய்துக்கொடுக்கவேண்டும் என்று சகுனி நினைத்திருந்தார்.

காந்தாரி

அச்சமயத்தில் அஸ்தினாபுரத்து அரசராகிய பார்வைத்திறனற்ற திருதிராட்டிரரை விவாகம் செய்துக் கொள்ள எந்த இளவரசியும் முன்வராமல் இருந்தனர். பீஷ்மர், தம்பி மகனான திருதிராட்டிரருக்கு பெண் தேடினார்.

குறுநில மன்னரான சுபாலன் காந்தார நாட்டை ஆட்சி செய்து வந்தார். இவருக்கு காந்தாரி என்ற மகளும், கடைசி மகனாக சகுனியும் இருந்தனர். இச்சமயத்தில் பீஷ்மருக்கு காந்தாரி என்ற இளவரசி இருப்பது தெரியவரவே, சுபாலனிடம் சென்று தனது தம்பி மகனான திருதிராட்டிரருக்கு காந்தாரியை மணமுடித்து தருமாரு கேட்டார் அவர். சுபாலனால் பீஷ்மரின் வேண்டுதலை தவிர்க்க முடியவில்லை.

பீஷ்மர்

காரணம், பீஷ்மரை எதிர்த்தால் தனது நாடு பறிபோகும் என்பதுடன் அனைவரையும் சிறை கைதியாக்கி விடுவார். பிறகு சகுனியால் காந்தாரத்தை ஆட்சி செய்ய இயலாமல் போகும் என்ற எண்ணத்தில், தனது மகளை திருதிராட்டிரருக்கு மணம் முடித்துக்கொடுத்தார். இதில் சகுனிக்கு சிறிதும் உடன்பாடு இல்லை. அப்பொழுதிலிருந்தே சகுனி பீஷ்மரை வெறுக்கத் தொடங்கியிருந்தார்.

காந்தாரிக்கும், திருதிராட்டிரருக்கும் திருமணம் முடிந்ததும், காந்தாரி, தன் கணவன் பார்க்காத இந்த உலகத்தை தானும் பார்க்கப்போவதில்லை என்று சபதம் கொண்டு தனது கண்களை கட்டிக்கொண்டாள். கண் இருந்தும் தனது சகோதரி உலகை பார்க்க முடியாமல் போனது சகுனிக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. இதில் அவர் திருதிராட்டிரரையும் வெறுத்தார்.

பீஷ்மர்

இதற்கிடையே ஒரு சமயம் ஊர் மக்களால், காந்தாரிக்கு ஏற்கனவே விவாகம் நடந்திருந்ததாக ஒரு செய்தி பீஷ்மரின் காதுக்கு எட்டியது. இது குறித்து சுபாலனிடம் கேட்டார் பீஷ்மர். சுபாலன், காந்தாரிக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதால், அவளின் முதல் கணவன் உயிருடன் இருக்கமாட்டார் என்பதால், ஒரு ஆட்டிற்கு தன் மகளை மணமுடித்து வைத்து, பிறகு அந்த ஆட்டை பலியிட்டதாகவும் கூறினார். தான் ஏமாற்றப்பட்டதாக நினைத்த பீஷ்மருக்கு ஆத்திரம் தலைக்கேறியது.

ஒரு கைம்பெண் தன் குலத்திற்கு மருமகளா என்ற கோபத்தில், சுபாலன் குடும்பத்தை சிறையில் அடைத்து ஒரு பிடி உணவும் ஒரு குவளை தண்ணீர் மட்டுமே கொடுக்க கட்டளை இட்டார். சுபாலனுக்கு இந்நிகழ்வு மிகவும் அவமானமாக போனது. பீஷ்மரின் வம்சத்தையே வேறோடு அழிக்க நினைத்தார். ஆனால் வீரத்திலும் தீரத்திலும் சிறந்து விளங்கிய பீஷ்மரை எதிர்த்தால் தான் தோல்வியடைவது நிச்சயம் என்று எண்ணிய சுபாலன், தந்து கடைசி மகனான சகுனியிடம், “ஒரு பிடி உணவும் ஒரு குவளை தண்ணீரையும் நாம் பிரித்து உண்டு வந்தாலும் பசியால் நாம் அனைவரும் மடிவது நிச்சயம். ஆனால் நமக்குள் ஒருவனான நீ மட்டும் இதை உண்டு உயிர் பிழைத்தால், நம் குடும்பத்தை சிதைத்த குருவம்சத்தையே உன் சூழ்ச்சியால் வேரறுக்க முடியும். செய்வாயா?” என்று கேட்டார். தந்தையின் யோசனையை தனது கடமையாக்கிக்கொண்டார் சகுனி.

ஒருபிடி உணவையும் ஒரு குவளை தண்ணீரையும் உண்டு சிறையில் வாழ்ந்து வந்த சகுனியின் கண் எதிரிலேயே அவரது குடும்பத்தினர் ஒவ்வொருவராக பட்டினியால் உயிர் துறந்தனர். இதைப்பார்த்த சகுனிக்கு வைராக்கியம் அதிகரித்தது. குருவம்சத்தை தனது சூழ்ச்சியால் அழிக்க நினைத்தார். அதனாலேயே தனது உடன் பிறந்த சகோதரியுடன் அவள் அருகில் இருந்துக்கொண்டே தனது நயவஞ்சக புத்தியாலும் பேச்சாலும் பாண்டவர்களையும் கௌரவர்களையும் பிரித்தார். இருவருக்குள்ளும் விரோதத்தை வளர்த்து கௌரவர்களை கூண்டோடு அழித்தார்.

கண்ணன்

தன் குடும்பத்தினரை அழித்தவரின் குலத்தை வேரோடு அழிப்பதற்கு ‘பலம் அவசியமில்லை, சூழ்ச்சியினூடே கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால் போதும்’ என சகுனி நினைத்தார். ஆனால் (போரில்) வெற்றி பெற வலிமையை விட சரியான எண்ணத்துடன் கூடிய புத்திசாலித்தனம்தான் தேவை என்பதை கண்ணன் சகுனிக்கு நிரூபித்திருப்பார்.

ஆக இம்மகாபாரதத்தில் திறமை, வலிமையை விட நேர்மையும் அதனூடே சேர்ந்த புத்திசாலித்தனமுமே வெற்றிபெற்றது. இது நம் வாழ்வுக்கும் பொருந்தும்!