பிரக்யாராஜ்ஜில் நடைப்பெற்றுவரும் கும்பமேளா... முக்கியத்துவம் என்ன?
திரிவேணி சங்கமம் எனும் வடமொழிச் சொல்லுக்கு மூன்று ஆறுகள் கூடுமிடம் என்று பொருள். அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் (பிரக்யாராஜ்) எனுமிடத்தில் கங்கை, யமுனை ஆறுகளுடன் கண்களுக்குப் புலப்படாத அடிப்பகுதியில் ஓடும் சரஸ்வதி ஆறும் வந்து கலப்பதாக ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரயாக்கில் கும்பமேளா நிகழ்த்தப்படுகிறது. அந்த வகையில் 2025ம் ஆண்டான இந்த வருடம் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடைப்பெற்று வருகிறது. கும்பமேளாவுக்காக உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்கள் பிரயாகில் கூடியிருக்கின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைப்பெறும் இந்த கும்பமேளாவின் முக்கியத்துவம் என்ன என்பதை பார்க்கலாம்.
கும்பமேளாவின் வகைகள்
மகா கும்பமேளா: இது பிரயாக்ராஜில் (முந்தைய அலகாபாத்தில்) மட்டுமே நடத்தப்பட்டது. இது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 12 பூர்ண கும்பமேளாவுக்குப் பிறகு நடத்தப்படுகிறது
பூர்ண கும்பமேளா அல்லது கும்பமேளா: இது ஒவ்வொரு 12 வருடங்களுக்கும் பிறகு மீண்டும் நடக்கும். பிரயாக்ராஜ், ஹரித்வார், நாசிக் மற்றும் உஜ்ஜைனியில் கும்பமேளா நடைபெற்றது. முந்தைய கும்பமேளா 2013 இல் பிரயாக்ராஜ், 2015 இல் நாசிக் மற்றும் 2016 இல் உஜ்ஜைனிலும், 2025ல் மீண்டும் பிரயாக்ராஜிலும் நடக்கிறது.
அர்த்த கும்பமேளா: இது அரை கும்பமேளா என்றும் அழைக்கப்படுகிறது, இது ஹரித்வார் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். முந்தைய அர்த்த கும்பமேளா 2016 இல் ஹரித்வாரிலும், 2019 இல் பிரயாக்ராஜிலும் நடந்தது.
மாக் மேளா: இது மினி கும்பம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆண்டுதோறும் பிரயாக்ராஜில் மட்டுமே நடைபெறும்.
கும்பமேளாவின் வரலாறு
கும்பத்தின் முக்கியத்துவம் அமிர்தம். தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுத்தக்கதை பரவலாக அனைவரும் தெரிந்த ஒன்று... அமிர்தம் வெளிவந்ததும், தேவர்கள் அதை அசுரர்களுக்கு கொடுக்காமல் தாங்கள் வைத்துக்கொண்டனர். அசுரர்கள் தேவர்களிடமிருந்து அமிர்தத்தை பெற நினைத்து அவர்களை 12 நாட்கள் (பிரம்மனின் கணக்குப்படி ஒருநாள் ஒரு வருடம் 12 நாள் 12 வருடம்) பின் தொடர்ந்தனர். அப்பொழுதுதேவர்களின் கைகளிலிருந்த அமிர்தமானது பூமியில் 4 இடங்களில் விழுந்தது. அந்த அமிர்தத்தை பெற வேண்டிதான் அவ்விடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெற்று வருகிறது.
கும்பமேளாவின் தொடக்க காலத்தை சரியாகக் கூறுவது கடினம், ஆனால் சில ஆன்மீக அறிஞர்களின் கூற்றுப்படி, கும்பமேளா கிமு 3464 இல் தொடங்கியது என்கிறார்கள்.
தை அம்மாவாசையின் முக்கியத்துவம்..
தை அம்மாவாசையானது முன்னோர்களுக்காக திதிக்கொடுக்கப்படும் நாளாக கருதப்படுகிறது. இதுவரை தனது முன்னோர்களுக்கு திதி கொடுக்காதவர்கள் தை அம்மாவாசை, ஆடி அம்மாவாசை போன்ற முக்கிய நாள் அன்று ராமேஸ்வரம், காசி போன்ற புனித இடங்களிலும், புனித நதிகளிலும் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தால், சாபவிமோசனம் பெறுவதுடன் முன்னோர்களின் ஆசியையும் பெறலாம் என்பது ஐதீகம். அதன்படி இந்த வருடம் தை அம்மாவாசையின் போது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பமேளாவும் இணைந்து வருவது சிறப்பான ஒன்றாகும்.
சரஸ்வதி நதியின் வரலாற்று சான்று...
கங்கை, யமுனை, சரஸ்வதி... இந்த நதிகள் மும்மூர்த்திகளின் துனைவியாரை குறிக்கும் நதியின் பெயற்கள் இந்த மூன்று நதிகளும் முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படிப்பட்ட இம்மூன்று நதிகளும் திரிவேணி சங்கமத்தில் ஒன்றாக இணைந்து ஓடுகின்றது. இதில் நம் கண்களுக்கு இரண்டு நதிகள் இணைவது நிற வேறுபாடால் தெரியும் ஆனால் மூன்றாவதான சரஸ்வதி நதி எங்கே கலக்கிறது என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது.
இதற்கு ஆதாரமாக ஸ்ரீமத் பாகவத புராணத்தில் சரஸ்வதி ஆறைப்பற்றிய ஒரு விளக்கம் உள்ளது. அதாவது சரஸ்வதி நதியானது தற்போதைய சௌராஷ்டிரா பகுதியில் இப்பொது இருக்கும் பாலைவனப்பகுதியில் ஓடிக்கொண்டிருந்துள்ளது... அங்கிருக்கும் மக்கள் கங்கை நதியினைப்போல சரஸ்வதி நதிக்கு பூஜைகள் செய்து கொண்டாடி வந்துள்ளனர். ஆனால் அப்பகுதி மக்கள் யவன் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் கலாசாரத்தை பின்பற்றத்தொடங்கியதால், சரஸ்வதி நதி அங்கிருந்து அகன்று பிரயாகில் யமுனைக்குக் கிழக்கே சட்லஜ்க்கு மேற்கே ஆறு ஓடுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிக்வேதத்தில் சரஸ்வதி நதியை அன்னவதி மற்றும் உடக்வதி என்று கூறப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் சரஸ்வதி நதியை பிளாக்ஷ்வதி, வேத்ஸ்மிருதி மற்றும் வேத்வதி என்று குறிப்பிடப்படுகிறது. தண்டயா மற்றும் ஜைமினிய பிராமணம் போன்றவற்றில் , சரஸ்வதி நதி வறண்ட பாலைவனமாக மாறியதாக விவரிக்கப்படுள்ளது.
மற்றொரு ஆதாரமாக மகாபாரதத்தில், சரஸ்வதி நதி ஓடிய இடத்தை "வினாஷன்" என்று குறிப்பிடுகிறது. கிருஷ்ணனின் தமயனான பலராம் துவாரகையிலிருந்து மதுராவிற்கு சரஸ்வதி நதி வழியாக பயணித்ததாகவும் மகாபாரதம் குறிப்பிடுகிறது .
சரஸ்வதி எப்படி கங்கையில் கலந்தாள்?
வேத நூல்கள் 'திரிஷ்த்வதி' என்று அழைக்கப்படும் மற்றொரு நதி இருப்பதை விவரிக்கின்றன. இந்த நதி சரஸ்வதிக்கு உதவி நதியாக செயல்பட்டு ஹரியானா வழியாக சென்றது. அதே நேரத்தில், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் முழுவதும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அச்சமயத்தில் மலைகள் உயர்ந்ததால், திரிஷ்த்வதி ஆறு தனது ஓட்டத்தை மாற்றியதாக கூறப்படுகிறது. இந்த த்ரிஷ்த்வதி நதியை இப்போது யமுனை என்று அழைக்கின்றனர்.
சரஸ்வதி நதி மறைந்த நிலையில், த்ரிஷ்த்வதியின் ஓட்டமும் மாறியது. இதே நதியான த்ரிஷ்த்வதி இப்போது யமுனை என்று அழைக்கப்படுகிறது. இந்த நதியின் வரலாறு 4,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக நம்பப்படுகிறது. நிலநடுக்கத்தால் நிலம் உயரும் போது, சரஸ்வதியிலிருந்து பாதி தண்ணீர் யமுனையில் (திரிஷ்ட்வதி) மாற்றப்பட்டது. இப்படித்தான் சரஸ்வதியின் நீர் யமுனையுடன் இணைந்தது. அதனால்தான் பிரயாக் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம் என்று அழைக்கப்படுகிறது.