சிலுவையில் அறைதல் pt web
ஆன்மீகம்

‘சிலுவையில் அறைதல்’ எப்படி நடைமுறைக்கு வந்தது? உலகெங்கும் எப்படி பரவியது?

இறைமகன் இயேசுபிரானுக்கு முன் சிலுவையில் அறையப்பட்டவர்கள் எத்தனை ஆயிரம் பேர் தெரியுமா? மிக மோசமான அந்த தண்டனை எப்படி நடைமுறைக்கு வந்தது? உலகெங்கும் எப்படி பரவியது? "சிலுவையில் அறைதல்” வரலாற்றை அறிந்துகொள்வோம்…

PT WEB

செய்தியாளர்: விக்ரம் ரவிசங்கர்

இறைமகன் இயேசுபிரான் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், கொடூரமான அந்த தண்டனை அவர் பிறப்புக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தே நடைமுறையில் இருந்தது உங்களுக்குத் தெரியுமா?

பண்டையகாலத்தில் மரண தண்டனையை நிறைவேற்ற பல நடைமுறைகள் கையாளப்பட்டன. அவற்றில் மிகக் கொடூரமானதாகக் கருதப்பட்ட ஒன்றுதான் சிலுவையில் அறைதல். கொடூரமான முறை மட்டுமல்ல, பார்வையாளர்கள் மத்தியில் ஒருவித அச்சத்த விதைக்கின்ற செயலாகவும் அது இருந்தது. ஏனென்றால், சிலுவையில் அறையப்பட்ட எல்லாருமே, உடனே இறந்துவிடுவதில்லை.

கிறிஸ்து காலத்துக்கு முன்...

சிலுவையில் அறைதல் என்பது, முதன்முதலில் அசீரியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் காலத்தில் உருவானதாக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அந்த இரு பெரும் நாகரிகங்கள் தான் தற்போதைய மத்திய கிழக்கு பகுதியாக இருக்கின்றன.

அசீரியர்களின் அரண்மனை அலங்காரங்களில் சிலுவை அறைதல் பற்றிய குறிப்புகள் இருக்கிறதாம். போர் மற்றும் ஆக்கிரமிப்புகளை காட்சிப்படுத்துகிற ஓவியங்களில் சிறைப்பிடிக்கப்பட்ட நபர்கள் கொல்லப்படுவது, சிலுவையில் அறைதலுடன் ஒத்துப்போவதாகக் கூறுப்படுகிறது.

கிமு 6ஆம் நூற்றாண்டில், சிலுவையில் அறைதல் பாரசீகர்களாலேயும் கடைப்பிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இப்படித்தான் பரவியதா?

கிமு 4ஆம் நூற்றாண்டில் மாமன்னர் அலெக்சாண்டர் தான், இந்த தண்டனையை மத்திய தரைக்கடல் பகுதியின் கிழக்கு நாடுகளுக்கு கொண்டு சென்றிருக்கிறார். அப்போது வேறு பெயரில் இருந்த, தற்போதைய லெபனான் பகுதியை அலெக்சாண்டர் முற்றுகையிட்டதாகவும், அங்கிருந்த 2000 பேரை சிலுவையில் அறைந்ததாகவும் வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அலெக்சாண்டர் வழி வந்தவர்கள், இந்த தண்டனைய எகிப்து, சிரியா, பின்னர் வடக்கு ஆப்ரிக்க நகரங்கள் வரையிலும் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதன்பிறகு, ரோமானியர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ. அங்கெல்லாம் சிலுவையில் அறைதலை கடைபிடித்திருக்கிறார்கள். ஆனால், கிபி 9ஆம் ஆண்டில் நடந்த ஒரு போருக்குப் பிறகு ஜெர்மானிய ஜெனரல் ஒருவர், ரோமானிய சிப்பாய்களை சிலுவையில் அறைய உத்தரவிட்டிருக்கிறார்.

கிபி 60ஆம் ஆண்டில், பிரிட்டன் பழங்குடியின ராணி ஒருவர், ஒரு பெரும் கலவரத்துக்கு தலைமை தாங்கி, ரோமானியர்களுக்கு எதிராக படையெடுத்துச் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் படை வீரர்கள் பலர் சிலுவையில் அறையப்பட்டதாக வரலாற்றுத் தகவல் இருக்கிறது.

புனித நிலத்திலும்…

Flavius Josephus

இஸ்ரேலிலும் கூட இந்த வகையான தண்டனை ரோமானியர்களின் வருகைக்கு முன்பு இருந்தே நடைமுறையில் இருந்திருக்கிறது என்று, முதல் நூற்றாண்டின் யூத வரலாற்றாசிரியர் ஃப்ளேவியஸ் ஜோசஃபஸ் ((Flavius Josephus)) கூறியிருக்கிறார். கிமு 103-ல் இருந்து கிமு 76 வரையிலும் யூதர்களை ஆட்சி செய்த அலெக்சாண்டர் ஜன்னாயஸ் என்கிற மன்னன், கிமு 88ஆம் ஆண்டுவாக்கில், 800 பேரை ஒரே நேரத்தில் சிலுவையில் அறைவதற்கு உத்தரவிட்டதாக, ஃப்ளேவியஸ் ஜோசஃபஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

ரோமானியர்கள்

ஆனால், ரோமனியர்கள் தான் இந்த முறை தண்டனைக்கு வெவ்வேறு விதமான சிலுவைகளை உருவாக்கி இருக்கிறார்கள். அவர்கள் தான் பல சமயங்களில் ‘T’ வடிவிலான சிலுவையை பயன்படுத்தி இருக்கிறார்கள். தண்டனை வழங்கப்படுகிற இடம் வரையிலும், தண்டனை பெறப் போகிறவர்களே அந்த சிலுவையை சுமந்து செல்லும் நடைமுறையையும் ரோமானியர்கள் தான் கொண்டுவந்திருக்கிறார்கள்.

மிக மோசமான தண்டனை

சிலுவையில் அறைதல் என்பது ஆபத்தான எதிரிகளுக்கு கொடுக்கப்பட்ட மிக மோசமான தண்டனையாக இருந்திருக்கிறது. அதாவது, மறுபடியும் யாரும் செய்யக் கூடாது என்பது போன்ற குற்றங்களுக்கு, அந்த தண்டனையை கொடுத்திருக்கிறார்கள். வலியை கற்பனை கூட செய்துபார்க்க முடியாது.

பலர் அதிகப்படியான ரத்தப் போக்கால் உயிரிழப்பார்கள். சிலர் மூச்சுத் திணறியும் உயிழப்பார்கள். சிலுவையில் அறைதலை பொறுத்தவரையில் சட்டென்று மரணம் ஏற்படாது. அது தான் மிகுந்த வலியைக் கொடுக்கும். பைபிளில், இயேசு 6 மணி நேரம் உயிர் பிழைத்திருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

எப்படி முடிவுக்கு வந்தது?

ரோமானிய பேரரசர் முதலாம் கான்ஸ்டண்டைன், கிபி 4ஆம் நூற்றாண்டில், சிலுவையில் அறைதல் முறையை ஒழித்து, கிறிஸ்துவத்தை தழுவினார். கிறிஸ்துவத்தை தழுவிய முதல் ரோமானிய பேரரசரும் அவர்தான். கிறிஸ்துவத்தை சட்டப்பூர்வமானதாகவும் மாற்றினார்.

ஆனாலும், பிற நாடுகளில் இந்த தண்டனை வழங்கப்படுவது தொடர்ந்தது. 1597ஆம் ஆண்டு, ஜப்பான்ல மிஷனரி உறுப்பினர்கள் 26 பேர் சிலுவையில் அறையப்பட்டார்கள். ஜப்பானிய கிறிஸ்தவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளான காலத்தின் தொடக்கம் அதுதான்.

இதுபோன்ற பயங்கர கடந்த காலங்களைக் கொண்டிருந்தாலும், கிறிஸ்தவர்களுக்கு, அன்பின் பெயரால் செய்யப்படுற தியாகத்தின் சின்னமாக விளங்குவது என்னவோ சிலுவை தான்.