Krishna Jayanti
Krishna Jayanti freepik
ஆன்மீகம்

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் அனைவருக்கும் பிடிக்க காரணம் என்ன தெரியுமா?

Jayashree A, PT WEB

துவாபர யுகத்தில், மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் தான் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தின் நோக்கம், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவது. அதன்படி கௌரவர்களை அழித்து பாண்டவர்களை காத்து, தர்மத்தை நிலைநாட்டினார். இதை மகாபாரதம் வாயிலாக நாம் தெரிந்துக்கொண்டோம். கிருஷ்ணா அவதாரத்தில் தான் நமக்கு புனித நூலான கீதை கிடைத்தது.

அந்த கீதையில் “பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்ததாய சம்பவாமி யுகே யுகே” என்று சொல்லியுள்ளார் கிருஷ்ணர். இதற்கு அர்த்தம், ‘எப்பொழுதெல்லாம் உலகில் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட யுகம் தோறும்; நான் அவதரிப்பேன்’ என்பது.

இதில், திரேதா யுகத்தில் அவதரித்த ராமரும், துவாபர யுகத்தில் அவதரித்த கிருஷ்ணரும் மகாவிஷ்ணுவின் அவதாரமே என்றாலும் இருவருக்கும் சிறிது கூட ஒற்றுமை கிடையாது.

- ராமர் ஒரு அரசரின் மகன், மாளிகையில் அவதரித்தார். கிருஷ்ணர் பிறந்தது ஒரு சிறைச்சாலையில். அப்பொழுது அவரது தந்தை ஒரு கைதி.

- ராமர் பிறந்ததும் ஊரே சந்தோஷத்தில் திளைத்தது. மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணர் பிறந்ததும் அவரது தாய் தேவகி, தந்தை வசுதேவரை தவிர வேற யாரொருவருக்கும் தெரியாது. மாற்றான் தாய் மகனாக வளர்ந்தார்.

- ராமர் பகலில், வெளுப்பாக பிறந்தார். கிருஷ்ணர் இரவில் கருப்பாக பிறந்தார்.

- ராமர் பொய் கூற மாட்டார். சொன்னதை செவ்வனே நிறைவேற்றக்கூடியவர்.

கிருஷ்ணரின் பேச்சை நம்ப முடியாது. சமயத்திற்கு தக்கவாறு தனது பேச்சை மாற்றக்கூடியவர்.

- ராமர் ஏகபத்தினி விரதன். கிருஷ்ணர் கோபிகைகள் சூழதான் இருப்பார். ராமரின் இளமை காலம் காட்டில் கழிந்தது. கிருஷ்ணர் அரண்மனையில் இருந்தார்.

இப்படி இருவரின் வாழ்கையும் முரண்பாடாக இருந்தாலும், இருவரின் நோக்கம் ஒன்று தான். அது அதர்மத்தை அழித்து தர்மத்தின் வழியில் நடப்பது. இருவரின் அவதாரத்திலும் ஒரு பெண்தான் முக்கியத்துவம் பெறுகிறாள்.

ராமர், கிருஷ்ணர் - இவர்களில் இன்றுவரை மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுவது கிருஷ்ணரின் பிறந்த நாள்தான்.

இதில் கிருஷ்ணர் பிறந்த தினமான ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியும், ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் (இன்று), கிருஷ்ண ஜெயந்தி.

கிருஷ்ண ஜெயந்தி அன்று, கிருஷ்ணருக்கு பிடித்ததாக சொல்லப்படும் அவல், வெண்ணைய், பால், தயிர், இனிப்புகள் லட்டு, முறுக்கு, தட்டை, சீடை, பழங்கள் என்று பல பட்சண வகைகளை ஆசையுடன் செய்து, கிருஷ்ணரை பூ, மாலை தோரணங்களால் அலங்கரித்து, வாசலில் மாக்கோலம் இட்டு, புத்தாடை அணிந்து, வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு, மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வர்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடுகளில் நுழைவாயிலில் இருந்து பூஜை அறை வரை குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவடுகளை பதியச் செய்வர். சில சமயம் குழந்தைகளின் கால்களை மாவுகளில் வைத்து அவர்களை நடக்கச் செய்வதும் உண்டு. கிருஷ்ண ஜெயந்தி அன்று பட்சணங்களை படைத்து வழிபடும் முறை குறித்து ஆன்மீக நாட்டமுடையவர்கள் கீதையில் கிருஷ்ணன் கூறியதை எடுத்துக் கூறுகின்றனர்.

கிருஷ்ணருக்கு எதைக் கொடுத்தாலும் பக்தியோடு கொடுக்க வேண்டுமாம். அது இலை, பூ, பழம், தண்ணீர் என எதுவாக இருந்தாலும் சரி. ஏனெனில் ‘சுத்தமான மனம் உள்ளவர்கள், எதைக் கொடுத்தாலும் பெற்றுக்கொள்வேன்’ என்பதே கிருஷ்ணரின் வாக்கு. இதனாலேயே இத்தினத்தின் கொண்டாட்டம் எல்லோருக்கும் பிடித்துப்போவதாக சொல்லப்படுகிறது. உங்கள் கருத்து என்ன? கமெண்ட் மூலம் எங்களோடு பகிருங்கள்!