செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
பிரசித்தி பெற்ற சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல், தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. கேரள உயர் நீதிமன்ற உத்தரவுபடி ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம், உடனடி ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் என தினசரி 80 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஆன்லைன் முன்பதிவு இல்லாமல் சபரிமலை வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துவிடக் கூடாது என்பதற்காக ஸ்பாட் புக்கிக் எண்ணிக்கை சூழலுக்கு ஏற்றாற்போல் அதிகரிக்கப்படுகிறது. இதனால் மகரவிளக்கு பூஜைக் காலத்தின் துவக்கமான டிசம்பர் 30ம் தேதி முதலே பக்தர்கள் வருகை சராசரியாக 90 ஆயிரம் முதல் ஒரு லட்சததைக் கடந்து பதிவாகி வருகிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோத துவங்கியது. மறுநாள் சனிக்கிழமை விடுமுறை என்பதால் மேலும் பக்தர்கள் வருகை அதிகமானது. ஞாயிற்றுக் கிழமையான நேற்று பக்தர்களின் வருகை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்டதால், நடை திறக்கப்பட்ட அதிகாலை 3 மணி முதலே காத்திருப்பு வரிசைகளில் இடைநில்லா வேகம் கூட்டப்பட்டது.
அதே போல், 18ம் படியிலும், கருவறை முன்பான தரிசனத்திலும் ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்கள் என்பது முடிந்த அளவு 100 ஆக மாற்றி கடத்தி விடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும் அனைத்து பக்தர்களுக்கும், பலமணி நேர காத்திருப்பு தவிர்க்கப்பட்டு சுபதரிசனமாக மாற, போலீஸார், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு மற்றும் கேரள அரசுத் துறைகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றன.