திருப்பாவை, திருவெம்பாவை  புதியதலைமுறை
ஆன்மீகம்

மார்கழி 5ம் நாள்: கண்ணன் அண்ணாமலையார்... புகழ் பாடும் ஆண்டாளும் தோழியரும்!

மார்கழி 5ம் நாள்: திருப்பாவையில் கண்ணனின் பெருமையை ஆண்டாள் தோழிகளிடம் பகிர்ந்தார். அதேநேரம் திருவெம்பாவையில் அண்ணாமலையாரின் பெருமையை தலைவியிடம் பகிர்கின்றனர் தோழிகள். இதை இன்று காணலாம்...

Jayashree A

மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன. இந்த மார்கழி மாதத்தில் இவை இரண்டிலும் தலா ஒரு பாடலையும், அதன் பொருளையும் நாம் பார்த்து வருகிறோம்.

அதன்படி ஐந்தாம் நாளான இன்றும் இரு பாடல்கள் மற்றும் அதன் பொருட்களை பார்க்கலாம்...

மார்கழி மாதம் 5ம் நாளன இன்று...

திருப்பாவை:

தனது தோழிகளுடன் பாவை நோன்பு இருக்க விரும்பிய ஆண்டாள், தூங்கிக்கொண்டிருந்த தோழிகளை எழுப்பி நீராட செல்லலாம் என்று அழைக்கிறார். பிறகு அனைவரும் நீராட நதி நிலைகள் பெருகிட மழை வேண்டி துதிக்கிறார். இன்று தோழிகளிடம் கண்னனின் பெருமைகளை எடுத்துக்கூறுகிறார். நமக்கு ஒரு பொருளின் மேல் அல்லது ஒருவரின் மேல் அன்புக்கொண்டால் மீண்டும் மீண்டும் அதைப்பற்றியே பேசுவோம் அல்லவா.. அதே போல் ஆண்டாள் கண்ணனின் மேல் கொண்ட காதலால், அவரைப்பற்றி தனது தோழிகளிடத்தில் பெருமையாக பேசுகிறார்.

பாடல்

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

பாடல் விளக்கம்

இதன் விளக்கம் என்னவென்றால் “மாய வித்தை செய்பவன், அவன் மதுராபுரியில் அவதரித்தவன், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவன், ஆயர்குலத்தில் ஒளி போன்று பிரகாசமாய் பிறந்தவன், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவன்...

இவனது சேட்டை பொறுக்காத யசோதை கண்ணனின் இடுப்பில் கயிறைக் கட்ட, கட்டப்பட்ட கயிறு அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனான எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படலாம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்” என்பதாகும்.

திருவெம்பாவை

திருவெம்பாவை ஐந்தாம் நாள் பாசுரம்

திருவண்ணாமலையில், சிவபெருமானும் பார்வதிதேவியும் அண்னாமலையாராகவும், உண்ணாமலையாகவும் அதிகாலை நேரத்தில் வீதியில் வலம் வருகிறார். அவரை வணங்குவதற்காக தோழிகள் மற்ற தோழிகளை எழுப்புகிறார். இதை மாணிக்கவாசகர் அழகாக பதிகம் இயற்றியுள்ளார்.

பாடல்

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்

போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்

கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்

சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று

ஓலம் இடினும் உணராய் உணராய்காண்

ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

விளக்கம்

“திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். ஆனால், அவரை எனக்கு தெரியும் என்று நீ சாதாரணமாகப் பேசுகிறாய். அவரை புரிந்துக்கொள்வது அவ்வளவு எளிமையில்லை... உன்னால் மட்டுமல்ல... இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலக தேவர்களாலுமே அவனை புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை நாங்கள் உணர்ச்சிப்பெருக்குடன் சிவசிவ என்று ஓலமிட்டு அழைக்கிறோம். ஆனால் நீயோ, பாலும் தேனும் ஊறியதைப்போன்ற உதட்டைக்கொண்டு, நறுமணத்திரவியம் பூசிய கூந்தலை கொண்டு ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறாயே...” என்கிறார்கள் தோழியர்!