பிரகஸ்பதி, தெக்‌ஷணாமூர்த்தி
பிரகஸ்பதி, தெக்‌ஷணாமூர்த்தி PT
ஜோதிடம்

குருவிற்கும் தெட்சணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாடு என்ன? யார் இவர்கள்? அறிவோம் ஆன்மீகம்!

Jayashree A

குரு பெயர்சி நடைபெற்ற இந்நேரத்தில் சிலர் குருவிற்கு பரிகாரம் செய்வதற்காக தெட்சணாமூர்த்தி சன்னிதிக்கு சென்று அவரை வணங்குவதுண்டு. உண்மையில் தெட்சணாமூர்த்தியும் குருவும் வெவ்வேறு அம்சங்கள். யார் இவர்கள் இருவரும், இருவருக்கும் என்னென்ன அம்சங்கள் உள்ளன? இதையெல்லாம் இக்கட்டுரை வழியாக அறியலாம் வாருங்கள்...

தெட்சிணாமூர்த்தி, 64 சிவ வடிவங்களில் ஒருவர். குரு, ஒன்பது நவகிரகங்களில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர்.

தெட்சிணாமூர்த்தி என்பவர் தென்முகக் கடவுள். தெற்கு நோக்கி வீற்றிருப்பவர். நவகிரகங்களில் ஒருவரான வியாழன் (குரு) பகவானின் திசையோ, வடக்கு. ஆக இங்கு திசையே முழுவதுமாக வேறுபடுகிறது.

அதே போல வியாழன் (குரு) என்னும் பிரகஸ்பதிக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கறுப்பு கொண்டைக் கடலை. தெட்சிணாமூர்த்தியோ வெண்ணிற ஆடையை உடுத்தியிருப்பவர்.

சரி தெட்சணாமூர்த்தி யார்?

சிவன் ஆக்கம், அழிவு என்ற தன்மைகள் இல்லாத பரம் பொருள். குருவோ தோற்றம் - மறைவு என்ற தன்மைகள் உடையவர். ஆக இவர் சிவனின் அம்சமே...!

தெட்சணாமூர்த்தி பிறந்த கதை:

பிரம்மா உலகத்தை படைக்க நினைத்தபோது, தனது முதல் படைப்பான சனகாதி முனிவர்களைப் (பிரம்ம குமாரர்கள்) படைத்தாராம். அவர்கள் நால்வரும் பிறந்தவுடன் உலகப்பற்றை விட நினைத்து பிரம்மாவிடம் வேண்டினர். ஆனால் பிரம்மாவோ... “நான் படைப்பின் அதிபதி. உங்களின் மூலமாக சந்ததியை உருவாக்கி, உலகத்தை நிர்ணயிக்க நினைத்து தான் உங்களைப் படைத்தேன். ஆனால் நீங்களோ உலகப்பற்றை விட நினைக்கிறீர்கள். எனில் என் படைப்பிற்குத்தான் அர்த்தம் ஏது? ஆகையால் நான் உங்களுக்கு உதவ மாட்டேன்” என்று கூறிவிட்டாராம். இதை அறிந்த நாரதர், சனகாதி முனிவர்களிடம் “நீங்கள் சிவபெருமானிடம் செல்லுங்கள். அவர் உங்களுக்கு உதவி புரிவார்” என்று கூறவும், சனகாதி முனிவர்கள் சிவனிடம் சென்றனர். ஆனால் சிவபெருமானோ பார்வதி தேவியுடன் வீற்றிருக்கையில், எவ்வாறு உலகப்பற்றை விடுவதற்கு ஞானம் அளிக்கமுடியும்? ஆகவே அவர் பதினாறு வயது பாலகனாக தெட்சணாமூர்த்தியை அவதரித்து தலவிருட்சத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு ஞானத்தை வழங்கினார்.

தெட்சணாமூர்த்தியின் உருவம் :

தெட்சிணாமூர்த்தி நான்கு கைகள் கொண்டு தலவிருச்சத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்திருப்பார். அவருடைய வலதுகால் 'அபஸ்மரா' என்ற அரக்கனை மிதித்த நிலையில் இருக்க (அபஸ்மரா அறியாமையை / இருளை குறிக்கின்றது), இரு வலது கைகளில் மேல் வலது கையில் ருத்திராட்ச மாலையையும் கீழ் வலது கையில் நெருப்பையும் வைத்திருப்பார். போலவே கீழ் இடது கையில் ஓலைச்சுவடியும் கீழ் வலது கையில் சின் ஞான முத்திரையையும் காட்டியபடியும் இருப்பார்.

குரு காயத்ரி மந்தரம்: ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு: ப்ரசோதயாத்

சரி இப்பொழுது குரு யார் என்று பார்க்கலாம்...

தேவர்களின் குருவான பிருகஸ்பதி தான் நவகிரகங்களில் நாம் அழைக்கும் குருபகவான். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரச முனிவரின் மகனாவார். இவருக்கு தாரை என்ற மனைவி உண்டு. நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர் இவர். எண்ணற்ற யாகங்களை செய்து தேவர்களின் குருவாக மாறியவர் இவர்.

இப்படியாக நவகிரக குரு வேறு, ஞான குரு வேறு (தெட்சிணாமூர்த்தி) என்பதை தெரிந்துக்கொள்வோம்.