ரஷ்யா - உக்ரைன்

’NO FLY ZONE’ என்றால் என்ன? உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கோரிக்கை விடுப்பதின் பின்னணி என்ன?

EllusamyKarthik

உக்ரைனில் ரஷ்யா படைகள் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த சூழலில் அப்பாவி மக்கள் உயிர் பலியாவதை தடுக்க உக்ரைனை ‘NO FLY ZONE’ அதாவது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என அதிபர் செலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இதற்கு ஒப்புதல் தெரிவிக்க மறுத்துள்ளன.

இதன் காரணத்தை அறிய NO FLY ZONE என்றால் என்ன? என தெரிந்து கொள்வது அவசியம். விமானம் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதி, பொதுவாக போர் சூழல்களிலும், மிக முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளிலும் அமல்படுத்தப்படும். உதாரணமாக இந்தியாவில் குடியரசு தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், விமானப்படை தளங்கள் அமைந்துள்ள பகுதிகள் NO FLY ZONE -களாக உள்ளன.

வழக்கமாக ஒரு பகுதி NO FLY ZONE என வரையறுக்கப்பட்டால் அந்த வான்வெளியில் பயணிகள் விமானம், ராணுவ விமானம், ட்ரோன்கள் என எதுவுமே பறக்க முடியாது. குறிப்பாக போர்க்காலங்களில் ராணுவத்தால் , விமானம் பறக்க முடியாத பகுதி என அறிவிக்கப்பட்டால், அதை மீறி அந்த வான் பரப்பில் நுழையும் விமானங்கள் உடனடியாக சுட்டு வீழ்த்தப்படும்.

1991ஆம் ஆண்டு வளைகுடா போரை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஈராக்கை விமானம் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்தன. 1992ஆம் ஆண்டு போஸ்னியாவிலும், 2011இல் லிபியாவிலும் பொதுமக்கள் மீது ராணுவ தாக்குதல்களை தடுக்க ஐநா , அந்நாடுகளின் வான் பரப்பில் விமானங்கள் பறக்க ஐநா தடை விதித்தது.

இதுவரை உக்ரைனில் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் படைகள் நேரடியாக சென்று போரிடவில்லை. உக்ரைனை விமானம் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதி என அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் அறிவித்தால், அந்த வான்பரப்பை பாதுகாக்க இவர்களின் படைகள் நேரடியாக செல்ல நேரிடும். இது ரஷ்யாவுடன் நேரடி போருக்கு வித்திடும் என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தயக்கம் காட்டுகின்றன.