ரஷ்யா - உக்ரைன்

உக்ரைன் - ரஷ்யா போர்: 11 நாட்களில் 15 லட்சம் பேர் அகதிகளான சோகம்

Veeramani

உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் , 15 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது. இதனிடையே உக்ரைன் மற்றும் ரஷ்யா தரப்பு திங்களன்று மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா படைகள் இறங்கியுள்ளன. இதனால் இரு தரப்புக்கும் இடையிலான மோதல் வலுத்திருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான இந்த சண்டையால் 11 நாட்களில் கிட்டதட்ட 15 லட்சம் மக்கள் அகதிகளாகியுள்ளனர். போரில் இருந்து தப்பித்து 15 லட்சம் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்டவற்றில் தஞ்சமடைந்துள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது. இரண்டாம் உலக போருக்கு பின், ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அகதிகள் நெருக்கடி இது என்றும் ஐநா கவலை தெரிவித்துள்ளது.



இதனிடையே ரஷ்யா படைகள் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. அதே வேளையில் உக்ரைன் அணு குண்டுகளை தயாரிப்பதாக ரஷ்யா புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ரஷ்யா, உக்ரைனின் துறைமுக நகரங்களை தாக்க முனைப்பு காட்டி வருவதால் அங்கு சிக்கி தவிக்கும் மக்கள் எங்கும் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மரியாபோல் நகர தெருக்களில் மனித உடல்களாக காணப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.



போர் காரணமாக உயிரிழப்புகளோடு மிகப்பெரிய பொருளாதார இழப்புகளையும் உக்ரைன் சந்தித்துள்ளது. ரஷ்யாவிலும் பொருளாதார தடைகள் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. விலைவாசி ஏற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முட்டை, ரொட்டி , இறைச்சி உள்ளிட்டவற்றின் விற்பனைக்கு ரஷ்யா அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த சூழலில் ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்றாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு கிடைக்க வேண்டும் என்பதே இரு நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.