ரஷ்யா - உக்ரைன்

“உக்ரைனில் மருத்துவ படிப்பு முடிய 3 மாசம்தான் இருந்துச்சு; ஆனால்,..”- நாகை மாணவர் கோரிக்கை

Sinekadhara

மூன்று மாதங்களில் மருத்துவப் படிப்பு முடிவடைய உள்ள நிலையில் போர் காரணமாக உக்ரைனிலிருந்து வேதாரண்யம் வந்த மருத்துவ மாணவர் செந்தில்நாதன், தன்னை போன்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பணி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடைய மகன் செந்தில்நாதன் கடந்த 2016 ஆம் ஆண்டு உக்ரைனில் உள்ள யுவானோ ப்ரான்கிவிஸ்க் நகரில் உள்ள யுவானோ ப்ரான்கிவிஸ்க் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் 6 ஆண்டுகால மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். வரும் மே மாதத்துடன் மருத்துவப் படிப்பு முடிவடைய உள்ள நிலையில் ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக சொந்த ஊருக்கு இன்று திரும்பினார். சொந்த ஊருக்கு திரும்பிய செந்தில்நாதனை அவருடைய குடும்பத்தினர் வரவேற்று ஆரத்தி எடுத்தனர்.

செந்தில்நாதன் படித்த பல்கலைக்கழகத்திற்கும் போர் நடைபெற்ற இடத்திற்கும் இடையே 500 கிலோ மீட்டர் தூரம் இருந்ததால் ரஷ்ய தாக்குதல் குறித்து எந்த பாதிப்பும் தெரியவில்லை எனக் கூறினார். ஆனால் ரஷ்ய ராணுவத் தாக்குதல் அதிகரித்த நிலையில் நீங்கள் தப்பித்துச் செல்லுங்கள் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்ததால் செந்தில்நாதன் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் பேருந்து மூலம் உக்ரைன் எல்லைக்கு வந்து இரவில் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்தே சென்று சுலோவாக்கியா நாட்டின் எல்லையை அடைந்ததாகவும், அங்குள்ள இந்திய தூதரகம் மாணவர்களை பாதுகாப்பாக தங்கவைத்து இந்திய அரசு விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி, அங்கிருந்து தமிழக அரசின் உதவியுன் சென்னை அடைந்து பிறகு வேதாரண்யம் வந்ததாகவும் மாணவர் செந்தில்நாதன் தெரிவித்தார்.

இன்னும் மூன்று மாதங்களில் மருத்துவப் படிப்பு முடிவடைய உள்ள நிலையில் போரின் காரணமாக தாய்நாட்டிற்குத் திரும்பி வரவேண்டிய சூழ்நிலை செந்தில்நாதனுக்கு ஏற்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு வர அனைத்து உதவிகளையும் செய்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், உக்ரைன் பல்கலைகழகத்தில் உள்ள தன்னைப் போன்ற மாணவர்களின் மருத்துவப் படிப்பு சான்றிதழ்கள் கிடைக்கவும், மருத்துவப் பணி கிடைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.