ரஷ்யா - உக்ரைன்

’’உக்ரைனில் ரயிலில் ஏற விடாமல் பெப்பர் ஸ்பிரே அடித்தனர்” - தமிழக மாணவி பகீர் பேட்டி

Sinekadhara

உக்ரைன் நாட்டிலிருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு வந்த மருத்துவம் பயிலும் மாணவி அபிராமி உக்ரைன் நாட்டில் உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து விவரித்தார். தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்க மத்திய மாநில அரசுகள் எனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியின் விஷ்ணுபுரம் ஊரைச் சேர்ந்தவர் மாணவி அபிராமி. இவர் நீட் தேர்வில் 370 மதிப்பெண்கள் பெற்று இந்தியாவில் மருத்துவம் படிக்க முடியாமல் உக்ரைன் நாட்டில் படித்து வருகிறார். ரஷ்ய எல்லைப்பகுதியான கார்கிவ் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து கஷ்டப்பட்டு ரயில் நிலையம் வந்த அபிராமி மற்றும் அவரது நண்பர்கள் ஏகப்பட்ட இன்னல்களை உக்ரைன் நாட்டினர்களால் சந்தித்துள்ளனர். கார்கிவ் பகுதியிலிருந்து தப்பித்து ரோமானியா எல்லை வருவதற்குள் அபிராமி பல்வேறு இன்னல்களை சந்தித்து உள்ளார். உக்ரைன் நாட்டினர் இந்தியர்களை ரயிலில் ஏறவிடாமல் பெப்பர் ஸ்பிரே அடித்ததாகவும், இந்தியர்கள் புகைப்படம், வீடியோ எடுக்க அவர்கள் அனுமதிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும், மிகவும் கடினப்பட்டு ரோமானிய எல்லை சென்று அதன் பிறகு டெல்லி வந்து டெல்லியில் இருந்து சென்னை வந்து சென்னையில் இருந்து திருவாரூர் வந்துள்ளார். ரோமானிய நாட்டினர் அவர்களுக்கு உதவியதை மிகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் தனக்கு உதவிய மத்திய மாநில அரசுகளுக்கும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்க்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘’இனி நான் உக்ரைன் நாட்டில் சென்று மருத்துவம் படிப்பது என்பது இயலாத காரியம். நீட் தேர்வில் 370 மதிப்பெண்கள் பெற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கு 496 மதிப்பெண்கள் பெற்றும் என்னால் மருத்துவம் பயில முடியாமல் போனதால்தான் நானும் உக்ரைன் நாட்டுக்கு சென்று படித்தேன். தற்போதைய சூழலில் என்னுடைய மருத்துவக் கனவு சிதையாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தில் எனக்கு மருத்துவம் படிக்க உதவி செய்யவேண்டும்’’ என வேதனையுடன் கோரிக்கை வைத்தார்.